உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / துன்பம் யாவையும் தீர்த்து வைக்கும் பிள்ளையார் விநாயகர் சதுர்த்தி வழிபாடு கோலாகலம்

துன்பம் யாவையும் தீர்த்து வைக்கும் பிள்ளையார் விநாயகர் சதுர்த்தி வழிபாடு கோலாகலம்

விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் விநாயகர் கோயில்களில் சதுர்த்தி பூஜை வழிபாடுகள் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமியின் அருளை பெற்றனர்.

விநாயகர் சதுர்த்தி நாளான நேற்று மாவட்டத்தில் உள்ள வீடுகளில் மக்கள் கொழுக்கட்டை, மோதகம் படைத்து விநாயகரை வழிபட்டனர். மேலும் பல்வேறு அமைப்பினர் விநாயகர் சிலைகளை வைத்தும், கோயில்களில் சிறப்பு பூஜைகள் செய்து பக்தர்கள் வழிபட்டனர்.

விருதுநகரில் வாலசுப்பிரமணிய சுவாமி கோயில் விநாயகர் சன்னதி, பராசக்தி மாரியம்மன் கோயில், வெயிலுகந்தம்மன் கோயில், மீனாட்சி சொக்கநாதர் கோயில் விநாயகர் சன்னதிகள், சிவகணேசன் கோயில், வழிவிடு விநாயகர் கோயில்களில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கணபதி ஹோமத்துடன் பூஜை துவங்கியது.

மேலும் காலை, மாலை அபிஷேகம், அலங்கார பூஜைகள் நடந்தது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

* சிவகாசி பஸ் ஸ்டாண்ட் அருகே விநாயகர் சதுர்த்திக்கு சிலை வைக்க அனுமதி கோரி ஹிந்து முன்னணி நிர்வாகிகள் வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நிலையில் போலீசார் அனுமதி கொடுத்ததால் சிலை வைத்து வழிபட்டனர்.

மேலும் சிவகாசி சிவன், மாரியம்மன், பத்ரகாளியம்மன், பேச்சியம்மன், துர்கை பரமேஸ்வரி அம்மன், முத்துமாரியம்மன், திருத்தங்கல் கருநெல்லி நாதர், முருகன் உள்ளிட்ட கோயில்களில் விநாயகருக்கு சிறப்பு பூஜை நடந்தது.

* சாத்துார் சோமசுந்தர விநாயகர் கோயில், மெயின்ரோட்டில் வெற்றி விநாயகர் கோயில், மடம் சின்ன ஓடைப்பட்டி வன்னி விநாயகர் கோயில், யாதவர் நந்தவனத்தில் உள்ள சக்தி விநாயகர் கோயில் என பல்வேறு கோயில்களில் அபிஷேகம், அலங்காரம் நடந்தது.

* ராஜபாளையம் தர்மாபுரம் மாப்பிள்ளை விநாயகர் கோயில் நற்பணி மன்றம் சார்பில்விநாயகர் சதுர்த்தி விழா ஊர்வலம் நடந்தது.

வடக்கு போலீஸ் ஸ்டேஷன் முன்பு உள்ள மாப்பிள்ளை விநாயகர் கோயில் அருகே செப்.7 தொடங்கி எட்டு நாட்கள் நடந்தது.

மேள தாளங்களுடன், பொய்க்கால் குதிரை, மோகினி ஆட்டம், ஒயிலாட்டத்துடன் நடந்தது.

பிரம்மாண்ட விநாயகர் சிலைகள் தனித்தனி வாகனங்களில் பழைய பஸ் ஸ்டாண்ட், தென்காசி ரோடு, காந்தி கலை மன்றம் வழியே ஊர்வலமாக சென்று புது பஸ் ஸ்டாண்ட் எதிரே உள்ள பெரியாதி குளம் கண்மாயில் கரைக்கப்பட்டது.

* அருப்புகோட்டை சொக்கலிங்கபுரம் படித்துறை விநாயகர் கோயில், மெயின் பஜாரில் உள்ள தாதன்குளம் விநாயகர் கோயில், டெலிபோன் ரோட்டில் உள்ள ஜெயசங்கர விநாயகர் கோயில்களில் அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டது. அருப்புக்கோட்டை அமுதலிங்கேஸ்வரர் கோயில் மகா கணபதி, தெப்பக்குளம் சித்தி விநாயகர், தெற்கு தெரு செல்வ விநாயகர், மதுரை ரோடு ஆழாக்கு அரிசி விநாயகர் உள்ளிட்ட கோயில்களில் விநாயகருக்கு அபிஷேகங்கள், அர்ச்சனைகள் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !