ஸ்ரீ வீரராகவப் பெருமாள் கோவிலில் ரூ.36.50 லட்சத்தில் அன்னதான மண்டபம்
திருப்பூர்: திருப்பூர் ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி மற்றும் ஸ்ரீவீரராகவப்பெருமாள் கோவில்களுக்கான, அன்னதான மண்டபம் கட்டும் பணி, 36.50 ரூபாய் மதிப்பீட்டில் நடந்து வருகிறது.
கோவில்களுக்கான செயல் அலுவலர் அலுவலகம், விஸ்வேஸ்வர சுவாமி கோவில் வளாகத்தில் அமைந்துள்ளது. அங்குள்ள மண்டபத்தில், தினமும், 50 பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்படுகிறது.
அன்னதான திட்டத்தில், தினமும், 100 நபர்களுக்கு அன்னதானம் வழங்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அதன்படி, விசாலமான அன்னதான கூடம், சமையல் அறை, கோவில் அலுவலகம் மற்றம் கழிப்பிடம், வீரராகவப்பெருமாள் கோவில் அருகே அமைக்கப்படுகிறது.
செயல் அலுவலர் வனராஜா கூறுகையில், ‘‘வீரராகவப்பெருமாள் கோவில் முன்பாக, கோவில் அலுவலகம், 29.20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படுகிறது.
வடமேற்கு மூலையில், அதன் அருகிலேயே, 36.50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சமையலறையுடன் கூடிய அன்னதான கூடம் மற்றும் 31 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கழிப்பிட வசதியும் அமைக்கப்படுகிறது. மொத்தம், 96.70 லட்சம் ரூபாய் மதிப்பிலான பணிகளுக்கு அனுமதி பெறப்பட்டுள்ளது,’’ என்றார்.