இடைவிடாமல் அருளும் கருணை மிக்கவர் சிவபெருமான்
திருப்பூர்: ‘சிவபெருமான், நமது பயத்தை போக்கி, இடைவிடாமல் அருள் செய்துகொண்டிருக்கிறார்,’ என, சித்தாந்த பேராசிரியர் சிவசண்முகம் பேசினார்.
கொங்கு மண்டல ஆடல்வல்லான் அறக்கட்டளை சார்பில், திருவாசகம் தொடர் பயிற்சி வகுப்பு, திருப்பூர் ஹார்வி குமாரசாமி மண்டபத்தில் நடைபெற்று வருகிறது.
வாரந்தோறும் செவ்வாய் கிழமை நடைபெறும் இந்த வகுப்பில், கோவையைச்சேர்ந்த சித்தாந்த பேராசிரியர் சிவசண்முகம் சொற்பொழிவாற்றிவருகிறார்.
நேற்றைய வகுப்பில் அவர் பேசியதாவது:
இந்த பிறவியில் நாமக்கு பல்வேறு அச்சம், கவலைகள் இருக்கின்றன. நோய் கண்டு பயம், பொருளாதாரத்தை பார்த்து பயம், நல்ல குழந்தைகள் வேண்டும். அவர்களுடைய எதிர்காலம் எப்படியிருக்குமோ என்கிற பயம் இருக்கிறது.
இப்படி பல்வேறு பயங்கள் இருக்கிறது. ஒருபயமும் இல்லை என்று சொன்னாலும்கூட, கடைசி காலத்தில் சிரமப்படாமல், போய்ச் சேர வேண்டும் என்கிற பயம் எல்லோருக்கும் இருக்கிறது.
நம் பயத்தை எல்லாம் நீக்க வல்லவர் சிவபெருமான். அவர் நமக்கு தினந்தோறும், ஒரு நிமிடம் கூட இடைவிடாமல் அருள் செய்து கொண்டிருக்கிறார். அத்தகைய கருணை அவரிடம் இருக்கிறது.
ஏதோ விநாயகர் சதுர்த்திக்கு வருவான்; அடுத்ததாக சரஸ்வதி பூஜைக்கு வருவான் என்றில்லை. பெருமான் எப்போதும் இடைவிடாது நமக்கு அருள் செய்து கொண்டிருக்கிறான்.
நமது முந்தைய பிறவி வினைகளின் காரணமாக, துன்பங்கள் சூழ்ந்து வருகின்றன. நம்மை சூழும் துன்பத்தை எல்லாம் பெருமான் நீக்குகிறார். நாம் செய்யவேண்டியதெல்லாம், தினமும் அவனை வழிபாடு செய்யவேண்டும். இடைவிடாது சிவபெருமானை வழிபாடு செய்பவர்கள், எந்த நேரத்திலும் எந்த துன்பமும் இல்லாமல் இருப்பார்.
இவ்வாறு, அவர் பேசினார்.