உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவில் நடை மூடல்: பக்தர்கள் ஏமாற்றம்

திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவில் நடை மூடல்: பக்தர்கள் ஏமாற்றம்

கடலுார்: கடலுார் திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவில் நடை திறக்காததால் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர். கடலுார், திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாக உள்ளது. பெருமாளுக்கு உகந்த புரட்டாசி மாதத்தில் இங்கு, பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வது வழக்கம். புரட்டாசி மாதத்தையொட்டி பக்தர்கள் வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்ய தடுப்பு கட்டைகள், வாகனங்கள் நிறுத்த வசதி, முடி காணிக்கை செய்ய பந்தல் அமைத்தல் உள்ளிட்ட விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 


வழக்கமாக விஸ்வரூப தரிசனம் முடிந்து காலை 6:00 மணிக்கு நடை திறப்பது வழக்கம். புரட்டாசி முதல் நாளான நேற்று விடியற்காலை 4:30 மணிக்கு நடை திறக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஏராளமான பக்தர்கள் நேற்று முன்தினம் நள்ளிரவு முதலே சுவாமி தரிசனத்திற்கு கோவிலுக்கு வரத் துவங்கினர். ஆனால், காலை வெகு நேரமாகியும் நடை திறக்காததால் பக்தர்கள் ஏமாற்றமடைந்தனர். பின், வாசலில் நின்றபடி வேண்டுதலை நிறைவேற்றி தரிசனம் செய்தனர். மாலை 4:00 மணிக்கு நடை திறக்கப்பட்டு, பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்து கோவில் நிர்வாகத்தினர் கூறுகையில், ‘கோவில் அமைந்துள்ள எல்லை பகுதியில் துக்க நிகழ்வு நடந்ததால் காலை நடை திறக்கவில்லை. மாலை நடை திறக்கப்பட்டது’ என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !