பழநி முருகன் கோயிலில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் ஒத்திகை
பழநி: பழநியில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் ரோப்காரில் விபத்து ஏற்படும்போது மீட்பு பணி குறித்த போலி ஒத்திகை நிகழ்ச்சி நடத்தினர்.
சென்னை, அரக்கோணத்தில் இருந்து நாலாவது பட்டாலியனிலிருந்து தேசிய பேரிடர் மீட்பு படையினர் இன்ஸ்பெக்டர் கலையரசன் தலைமையில் 30 பேர் கொண்ட குழுவினர் பழநி கோயில் ரோப் கார் நிலையத்திற்கு பேரிடர் மீட்பு, போலி ஒத்திகை நிகழ்ச்சி நடத்த வருகை புரிந்தனர். பழநி கோயில் பராமரிப்பு நேரமான மதியம் 1:30 மணி முதல் 2:30 மணி வரை நடந்தது. பேரிடர் ஒத்திகை துவங்கிய உடன் ரோப் கார் பெட்டிகளில் பணியாளர்கள் இரண்டு நபர்களை அமர்த்தி பாதி வழியில் அந்தரத்தில் நிறுத்தினர். அதன் பின் ரோப்கார் நிலையத்திலிருந்து போலீசார், தீயணைப்புத் துறையினர், மருத்துவ குழுவினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. தீயணைப்புத் துறையினர் ஐந்து நிமிடத்தில் சம்பவ இடத்திற்கு வந்து சேர்ந்தனர். அதன் பின் அந்தரத்தில் ரோப்கார் பெட்டியில் சிக்கி இருந்தவர்களை ஏணி மூலம் ஒருவரை மீட்டனர். அதன்பின் கோயில் ரோப் கார் பணியாளர்கள் மேலும் ஒருவரை ஒருவரை மீட்க முயற்சி செய்தனர். அதன்பின் வந்த தேசிய பேரிடர் மீட்பு படையினர் பிரத்தியேகமான உபகரணங்களை கொண்டு பாதுகாப்பாக மற்றொருவரை மீட்டனர். ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். நிகழ்ச்சியில் கோயில் இணை கமிஷனர் ஹரிஹரன், தாசில்தார் சஞ்சய் காந்தி, தீயணைப்பு நிலைய அலுவலர் காளிதாஸ், டிராபிக் இன்ஸ்பெக்டர் கார்த்திக், மற்றும் வனதுறையினர், கோயில் பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.