தடைகள், மனஅழுத்தம் நீக்கும் ரயில்வே கொல்லஹல்லி ஆஞ்சநேயர்
பெங்களூரு ரூரல், நெலமங்களா தாலுகா, பைரஷெட்டிஹள்ளி கிராமம் கொல்லஹள்ளி பகுதியில் பைலாஞ்சநேய சுவாமி கோவில் உள்ளது. ஹனுமனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட இக்கோவில், ரயில் தண்டவாளத்தை ஒட்டி அமைந்திருப்பதால், ரயில்வே கொல்லஹள்ளி ஆஞ்சநேயர் கோவில் என பக்தர்களால் அழைக்கப்படுகிறது.
மூலவராக ஹனுமன் வீற்றிருந்து, பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். ராமர், சீதா, லட்சுமண், விநாயகர் தெய்வங்களின் சன்னிதிகளும் உள்ளன.
கன்னட மொழியில் பயலு என்றால் திறந்தவெளி என்று பொருள். ஆரம்பகாலத்தில் இந்த கோவில் எந்தவொரு மூடிய கூரையும் இன்றி, திறந்தவெளியில் இருந்தது. இயற்கையான சூழ்நிலையில் சுயம்புவாக ஹனுமன் தோன்றியதால், பைலாஞ்சநேய சுவாமி என்ற பெயர் வந்தது.
தொழிலில் தொடர்ந்து ஏற்படும் தடைகள், மன அழுத்தம், பயம், திருஷ்டி தோஷங்கள் நீக்கும் இடமாக இந்த கோவில் அறியப்படுகிறது. தியானம் செய்வோர், மன அமைதியை தேடி வருபவர்களுக்கு இக்கோவில் சிறந்த ஆன்மிக தலமாக உள்ளனது.
கிராமப்புற சூழலில், சாலையில் இருபுறமும் அடர்ந்த பசுமையான மரங்கள் வரிசையாக சூழப்பட்ட, எழில் கொஞ்சும் பாதையில் கோவில் உள்ளது. கோவில் நடை தினமும் காலை 6:00 மணி முதல், இரவு 8:00 மணி வரை திறந்திருக்கும். சனிக்கிழமைகளில் விசேஷ பூஜை நடக்கிறது.