உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அம்மன் கோவிலில் நிறைமணி காட்சி

அம்மன் கோவிலில் நிறைமணி காட்சி

திருவேற்காடு: திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோவிலில், நிறைமணி காட்சி வழிபாட்டு நிகழ்வு கோலாகலமாக நடந்தது.

திருவேற்காடு சன்னிதி தெருவில் பிரசித்தி பெற்ற தேவி கருமாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இங்கு, தமிழகம் மட்டுமின்றி, பிற மாநில பக்தர்களும் வந்து செல்கின்றனர்.

இக்கோவிலில், ஆண்டுதோறும் புரட்டாசி மாத பவுர்ணமியை முன்னிட்டு, மூன்று நாட்கள் நிறைமணி காட்சி விழா நடத்தப்படுகிறது. அந்த வகையில் இந்தாண்டிற்கான விழா, நேற்று தொடங்கியது.

மழை பெய்து உலகம் செழிக்கவும், விவசாயம் தழைக்கவும், ஜீவராசிகள் பசி, பட்டினி, பஞ்சமின்றி வாழவும் வேண்டி, இந்த விழா நடத்தப்படுகிறது.

இதையொட்டி, கோவில் கருவறை மற்றும் முன்மண்டபத்தில் வாழைப்பழம், அன்னாசி, மாதுளை, ஆப்பிள் உள்ளிட்ட பழங்கள், காய்கறிகள், தானியங்கள், எண்ணெய், மூலிகை தாவரங்கள், இனிப்பு வகைகள் என, 5,000 கிலோ பொருட்களை கட்டி, பந்தல் போல தொங்கவிடப்பட்டுள்ளன.

இதைப் பார்க்க, தொங்கும் தோட்டம் போன்று அழகாக காட்சியளிக்கிறது. அதுமட்டுமல்லாமல், மூலவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு பூஜை, ஆராதனைகள் நடந்தன.

விழாவின் கடைசி நாளில், தொங்கவிடப்பட்ட அனைத்து பொருட்களையும் சேர்த்து, கூட்டாஞ்சோறு தயாரித்து, அம்மனுக்கு படைத்து, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !