உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வீர ஆஞ்சநேயர் கோவில் செல்லும் பாதை ஆக்கிரமிப்பு: மீட்கக்கோரி அறநிலைய துறையிடம் மனு

வீர ஆஞ்சநேயர் கோவில் செல்லும் பாதை ஆக்கிரமிப்பு: மீட்கக்கோரி அறநிலைய துறையிடம் மனு

மீஞ்சூர்: மேலுார் வீர ஆஞ்சநேயர் கோவிலுக்கு செல்லும் பாதையை, ஆக்கிரமித்து அனுபவித்து வரும் தனிநபரிடமிருந்து மீட்டுத்தர வேண்டும் என, பக்தர்கள் சார்பில், ஹிந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளிடம் மனு அளிக்கப்பட்டு உள்ளது.


மீஞ்சூர் அடுத்த மேலுார் கிராமத்தில், திருமணங்கீஸ்வரர் சமேத திருவுடையம்மன் கோவில் உள்ளது. பிரசித்திபெற்ற இந்த கோவிலுக்கு சொந்தமாக, 92 ஏக்கர் நிலங்கள், அதே கிராமத்தில் உள்ளன. இந்த நிலத்தின் ஒரு பகுதியில், வியாச மாமுனிவரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட சஞ்சீவிராய வீர ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. ராமநவமி, ஆஞ்சநேயர் ஜெயந்தி, அமாவாசை, பவுர்ணமி உள்ளிட்ட விசேஷ நாட்களில், இக்கோவிலில் பக்தர்கள் சிறப்பு பூஜைகளை மேற்கொண்டு வந்தனர். இந்த கோவிலுக்கு செல்லும் பாதையை, தனிநபர் ஒருவர் ஆக்கிரமித்து, பல ஆண்டுகளாக அனுபவித்து வருகிறார். அதனால் தற்போது, இந்த கோவிலுக்கு செல்ல உரிய பாதை வசதி இல்லாமல் பக்தர்கள் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே, வீர ஆஞ்சநேயர் கோவிலுக்கு செல்லும் பாதையை, தனிநபர் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்டுத்தர வேண்டும் என, பக்தர்கள் சார்பில், ஹிந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகளிடம் மனு அளிக்கப்பட்டு உள்ளது.


அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: திருவுடையம்மன் கோவில் நிலத்தில் வசித்து வரும் தனிநபர் ஒருவர், வீர ஆஞ்சநேயர் கோவிலுக்கு செல்லும் பாதையை ஆக்கிரமித்து வேலி அமைத்துள்ளார். இதனால், பக்தர்கள் கோவிலுக்கு சென்று வருவதில் சிரமம் உள்ளது. எனவே, ஆக்கிரமித்து அமைக்கப்பட்ட வேலியை அகற்றி, வீர ஆஞ்சநேயர் கோவிலுக்கு செல்வதற்கு உரிய பாதை வசதி ஏற்படுத்த வேண்டும். மேலும், ஹிந்து சமய அறநிலைத்துறையின் மூலம், தினமும் நித்ய கால பூஜைகளை மேற்கொள்ளவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !