தர்மம் காப்பவர்களின் ஆதாரம் ராமர்
மதுரை: மதுரை தல்லாகுளம் லட்சுமிசுந்தரம் ஹாலில், அகில பாரத ஸாது சங்கம் சார்பில், தினமும் ஸ்ரீமத் வால்மீகி ராமாயண சொற்பொழிவு நடக்கிறது.
இதில் ‘கவுசல்யா மங்களாசாஸனம்’ என்ற தலைப்பில் ரெங்கன் ஜி சிஷ்யை காயத்ரி பேசியதாவது: ராமாயணத்தை கேட்டு, அதன் கருத்துகளை வாழ்க்கையில் பின்பற்றினால், பிறரை துன்புறுத்தாமல் வாழும் மனநிலை உருவாகும். ராமரிடம், பட்டாபிஷேகத்திற்கு முன் காட்டுக்கு செல்ல வேண்டும் என்று கூறியபோதும், அவர் மனம் கலங்கவில்லை. தனக்கு ஏற்பட்டதை அவமானம் என எடுத்துக் கொள்ளாமல், தனது தர்மத்தில் உறுதியாக நின்றார்.
கோசலையை சந்திக்கச் செல்லும்போது, அவரிடம் தாயைப் பிரியும் வேதனை இருந்தது. ஆனால், அதனை வெளிப்படுத்தாமல், குடும்பத்தினரின் மனநிலையையும் கருத்தில் கொண்டு நிதானமாக நடந்துகொண்டார். பெரியோர் கடைப்பிடித்த தர்மத்தின் வழியில் வாழ வேண்டும் என கோசலை, ராமருக்கு அறிவுரை வழங்கினார். செல்வம், பதவி ஆகியவற்றைவிட நேர்மையாக வாழ்வது மட்டுமே சிறந்த வாழ்க்கை என்றும் விளக்கினார்.
ராமரின் வாழ்வில் தர்மமே அவரை வழிநடத்தியது என்பதை ராமாயணம் எடுத்துக்காட்டுகிறது. ராவணன் தர்மத்தை அழித்ததால் அழிந்தான். தர்மத்தை காத்த ரிஷிகள், சுக்ரீவன், சீதை உள்ளிட்டோர் ராமரின் அருளைப் பெற்றனர். தர்மத்தை காப்பவர்களுக்கு ஆதாரமாக இருப்பவரே ராமர் என்றார். இன்று (அக்.3) மாலை 4:00 மணிக்கு இச்சொற்பொழிவு தொடர்கிறது. அகில பாரத ஸாது சங்கத்தினர் ஏற்பாடு செய்துள்ளனர்.