மழை பெய்ய வேண்டி பாறை கஞ்சி வழிபாடு
உடுமலை: உடுமலை அருகே, மழை பெய்ய வேண்டி, கிராம மக்கள், கோவில் பாறையில் கஞ்சி ஊற்றி உண்டு, நுாதன வழிபாடு செய்தனர்.
உடுமலை அருகே, சாமராயபட்டியில், பழமையான, பாப்பம்பாறை, ஸ்ரீ தேவி, பூதேவி சமேத ஆதிகேசவ பெருமாள் மற்றும் கல்யாண விநாயகர், சுப்ரமணிய சுவாமி கோவில்கள் உள்ளன.
மலை மீது, 15 ஏக்கர் பரப்பளவில் முழுவதும் பாறையில் அமைந்துள்ள இக்கோவிலில், பாரம்பரிய முறைப்படி, புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமையான நேற்று, மழை பெய்ய வேண்டி, கிராம மக்கள் இணைந்து கஞ்சி காய்ச்சி, சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் செய்தனர். தொடர்ந்து, கஞ்சியை பாறையில் ஊற்றி உண்டு, நுாதன வழிபாடு செய்தனர்.
கிராம மக்கள் கூறியதாவது:
மழை பொழிவு இல்லாமல், கடும் வறட்சி ஏற்பட்டு விவசாயம் பாதித்துள்ளது. மழை பெய்ய வேண்டி, சுவாமியை வழிபடும் வகையில், ஊர் மக்கள் இணைந்து பாரம்பரிய முறைப்படி வீடுகள் தோறும் சென்று அரிசி பெற்று, கோவிலுக்கு எடுத்து வந்து, கஞ்சி காய்ச்சினோம்.
அதன்பின், தாயாருடன் பெருமாள், விநாயகர், சுப்ரமணிய சுவாமிகளுக்கு சிறப்பு பூஜைகள், அபிஷேகம் செய்து வழிபாடு நடத்தினோம்.
கஞ்சியை கோவில் வளாகத்திலுள்ள பாறையில் ஊற்றி அதை உண்டால், மழை பொழியும் என்ற ஐதீகம் உள்ளது. அதனால், பாரம்பரியமான பாறை கஞ்சி வழிபாடு செய்தோம்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்