அழகர்கோவிலில் தங்க கருட வாகனத்தில் வண்ண குடையுடன் அருள்பாலித்த அழகர்
அழகர்கோவில்: அழகர்கோவில் கள்ளழகர் கோயிலில் புரட்டாசி குடை திருவிழாவை முன்னிட்டு தங்க கருட வாகனத்தில் வண்ணக் குடையுடன் சுந்தரராஜ பெருமாள் அருள்பாலித்தார்.
மதுரை கீழமாரட் வீதி நவநீத கண்ணன் பஜனை கூடம் சார்பில் பக்தர்களின் நேர்த்திக்கடனாக கள்ளழகருக்கு வண்ணக் குடை சாத்தும் வைபவம் ஆண்டு தோறும் புரட்டாசி மூன்றாவது வாரம் நடக்கிறது. அதன்படி, இன்று காலை 8:30 மணியளவில் மூலவர் சன்னதியில் இருந்து புறப்பட்ட பெருமாள், ஆண்டாள் சன்னதி முன் அலங்கரிக்கப்பட்ட மலர் பந்தலில் எழுந்தருளினார். அங்கு அவருக்கு பால், பன்னீர், சந்தனம், நுாபுர கங்கை தீர்த்தம் கொண்டு திருமஞ்சனம் நடந்தது.
இதற்கிடையில், நேற்று முழுவதும் பஜனைக் கூடத்தில் வைத்து பூஜிக்கப்பட்ட வண்ணக் குடை, இன்று காலை பஜனை குழுவினருடன் அழகர்கோவில் புறப்பட்டது. தல்லாகுளம், கடச்சனேந்தல், அப்பன் திருப்பதி, கள்ளந்திரி வழியாக பாதயாத்திரையாக கொண்டு செல்லப்பட்டு, மதியம் 1:00 மணிக்கு கள்ளழகர் கோயில் வந்தடைந்தது. பின் சகல பரிவாரங்களுடன் ஆடி வீதிகளில் உலா வந்து ஆண்டாள் சன்னதியை அடைந்தது. அங்கு தங்க கருட வாகனத்தில் எழுந்தருளிய பெருமாளுக்கு அணிவிக்கப்பட்டு தீபாராதனை நடந்தது. பஜனை குழுவினர் பக்தி பாடல்களை பாடினர். திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். பின்னர் ஆண்டாள் சன்னதியில் இருந்து புறப்பட்ட பெருமாள், ஆஸ்தானம் சேர்ந்தார். ஏற்பாடுகளை கோயில் இணை கமிஷனர் ஹரிஹரன் தலைமையில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.