மழை வேண்டி பொங்கல் வைத்து கிராமங்களில் வழிபாடு
ADDED :1 days ago
சூலூர்: மழை வளம் பெருக வேண்டி, விநாயகர், கிருஷ்ணருக்கு பொங்கல் வைத்து கிராமங்களில் வழிபாடு நடந்தது.
பருவ மழையின்மை காரணமாக கிராமங்களில் விவசாயம் மேற்கொள்ள முடியாமல், மக்களும், விவசாயிகளும் நெருக்கடிக்கு உள்ளாகி உள்ளனர். இந்நிலையில், மழை வேண்டி பல்வேறு கிராமங்களில் மக்களும், விவசாயிகளும் வழிபாடுகள் நடத்தி வருகின்றனர். சூலூர் அடுத்த செலக்கரச்சல், வீரண்ண பூசாரி பாளையம் உள்ளிட்ட கிராமங்களில், மழைச்சோறு எடுத்து, ஊர்வலமாக வந்து விநாயகர், கிருஷ்ணர் மற்றும் எல்லை கருப்பராயனுக்கு பொங்கல் வைத்து, படையலிட்டு வழிபாடுகள் நடத்தப்பட்டன. முன்னதாக, ஊர்வலமாக வந்த பெண்கள், மழை வேண்டி இறைவனை போற்றி பாடி கும்மியடித்தனர். மழை வளம் பெருகவும், கிராமங்களில் விவசாயம் செழிக்கவும் இறைவனை மனமுருகி வேண்டினர். அனைவருக்கும் மழைச்சோறு பிரசாதமாக வழங்கப்பட்டது.