உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வடலூரில் வள்ளலார் பிறந்த நாள் விழா கோலாகலம்: இரவு 7:45 மணிக்கு ஜோதி தரிசனம்

வடலூரில் வள்ளலார் பிறந்த நாள் விழா கோலாகலம்: இரவு 7:45 மணிக்கு ஜோதி தரிசனம்

வடலூர்: வடலூரில் மாத பூசம் தினமான இன்று வள்ளலார் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.


கடலூர் மாவட்டம், வடலூரில், வள்ளலார் என அழைக்கப்படும், இராமலிங்க அடிகளார், கடந்த 5.10.1823ல் அவதரித்தார். வடலூரில் இவர் நிறுவிய சத்திய ஞான சபை, தருமச்சாலை மூலம் சன்மார்க்க கருத்துகள் பரப்பப்பட்டு வருகின்றன. மற்ற உயிர்களையும் தம்மை போல நினைப்பதே சன்மார்க்கத்தின் கொள்கை ஆகும். இங்குள்ள சத்திய ஞான சபையில் மாதந்தோறும் பூசம் நட்சத்திர தினத்தில் ஆறு திரைகள் விலக்கப்பட்டு, ஜோதி தரிசனம் காண்பிக்கப்படுவது வழக்கம். மாத பூசம் தினமான இன்று வடலூரில் வள்ளலாரின், 204வது பிறந்தநாள் விழா விமரிசையாக கொண்டாடப்பட்டது. விழாவையொட்டி இங்கு கடந்த ஒரு வாரமாக, தருமச்சாலையில் அருட்பெருஞ்ஜோதி மகா மந்திரம் பாராயணம், ஞான சபையில் திருவருட்பா முற்றோதல் ஆகியவை நடந்தன. வள்ளலார் பிறந்த தினமான இன்று காலை, 7:30 மணிக்கு தருமச்சாலையில் சன்மார்க்க கொடி உயர்த்தப்பட்டு விழா தொடங்கியது. வள்ளலாருக்கு சத்திய ஞான சபை, தருமச்சாலை, பெருவெளி ஆகியவை அமைய இடம் தந்த பார்வதிபுரம் கிராம மக்கள் நிதி திரட்டி அமைக்கப்பட்ட புதிய கொடிமரத்தில், இன்று காலை 10:00 மணிக்கு மேல், அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை மகா மந்திரம் முழங்க, சன்மார்க்க கொடி உயர்த்தப்பட்டது. விழாவையொட்டி நாள் முழுவதும் தருமச்சாலையில் அன்னதானம் வழங்கப்பட்டது. ஞான சபையில் இரவு 7:45 மணிக்கு ஜோதி தரிசனம் நடைபெறும். இதே போல வள்ளலார் சித்தி பெற்ற மேட்டுக்குப்பம் மற்றும், தண்ணீரில் விளக்கு எரித்த கருங்குழி ஆகிய இடங்களிலும் வள்ளலார் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !