தொட்டிபாளையம் பத்ர காளியம்மன் கோவில் மண்டல பூஜை நிறைவு
கோவில்பாளையம்: தொட்டிபாளையம், பத்ரகாளி அம்மன் கோவில் மண்டல பூஜை நிறைவு விழா வரும் 10ம் தேதி நடைபெறுகிறது.
வெள்ளமடை அருகே தொட்டிபாளையம், பத்ரகாளி அம்மன் கோவில் பழமையானது. இக்கோவிலில் பல்வேறு திருப்பணிகள் செய்யப்பட்டு கடந்த ஆகஸ்ட்டில் கும்பாபிஷேகம் நடந்தது. இதையடுத்து, தினமும் மண்டல பூஜை நடைபெறுகிறது. அம்மனுக்கு அபிஷேக பூஜை, அலங்கார பூஜை, தீபாராதனையும், அன்னதானமும் தினமும் நடைபெறுகிறது. 48வது நாளான, வரும் 10ம் தேதி மண்டல பூஜை நிறைவு விழா நடைபெறுகிறது. காலை 6:00 மணிக்கு கணபதி பூஜை, 7:00 மணிக்கு விநாயகர் கோவிலில் இருந்து பக்தர்கள் ஊர்வலமாக பால்குடம் எடுத்து வருதல் நடக்கிறது. காலை 9:30 மணிக்கு, அபிஷேக பூஜையும், இதையடுத்து அலங்கார பூஜை, தீபாராதனை நடைபெறுகிறது. மதியம் 1:00 மணிக்கு உற்சவர் அலங்காரத்துடன் திருவீதி உலா புறப்பட்டு மாலை 5:00 மணிக்கு மீண்டும் கோவிலை வந்து அடைகிறது. விழாவில் பங்கேற்று இறையருள் பெற கோவில் நிர்வாகிகள் அழைப்பு விடுத்துள்ளனர்.