புரட்டாசி சனிக்கிழமையில் மகாளய அமாவாசை: இன்று மாலை ஒரு தீபம் ஏற்றுங்க.. கோடி புண்ணியம் கிடைக்கும்!
இன்று புரட்டாசி சனிக்கிழமை மற்றும் மகாளய அமாவாசை சேர்ந்து வருவது சிறப்பானதாக கருதப்படுகிறது.
பொதுவாக திருமாலை சனிக்கிழமையில் வழிபடுவது மிகவும் சிறப்பென்கின்றனர் பெரியோர்கள். அதுவும் புரட்டாசி சனிக்கிழமைகளில் பெருமாளை வழிபட்டால் எல்லாவிதமான கஷ்டங்களும் நீங்கி வளமான வாழ்வு கிட்டும் என்பது இந்து மதத்தின் மரபு வழி நம்பிக்கை. ஒன்பது கோள்களில் ஒன்றான புதன் கிரகத்திற்கு உரிய மாதங்களில் புரட்டாசியும் ஒன்றென்கின்றனர். புதனின் அதி தேவதையாகவும், பிரத்யதி தேவதையாகவும் இருப்பவர் மஹாவிஷ்ணு. ஆகவே விஷ்ணுவின் அருள்பெற உகந்த மாதமாக புரட்டாசி திகழ்கிறது. இன்று புரட்டாசி சனிக்கிழமை மற்றும் அமாவாசை இணைந்து வருவது மிக சிறந்ததாகும்.
மஹாளய அமாவாசை அன்று தந்தை வழி மற்றும் தாய் வழி மற்றும் நம் உறவினர்கள் அனைவருக்கும் தர்ப்பணம் கொடுப்பது மிக சிறந்ததாகும் இந்நாளில் முன்னோர்களை நினைத்து வழிபட்டு அவர்கள் அருள் பெற வேண்டும். பூலோகத்திற்கு தங்கள் பிள்ளைகளை பார்க்க வந்த முன்னோர் மீண்டும் பிதுர்லோகத்திற்கு இன்று திரும்புவதாக ஐதீகம். இந்நாளில் தீர்த்தக் கரைகளில் நீராடுவதும், பிதுர் வழிபாடு செய்து அவர்களை வழியனுப்பி வைப்பதும் குடும்பம் செல்வச்செழிப்புடன் வாழ உதவும்.
தீபம் ஏற்றுங்க: சிறப்பு மிக்க இன்றைய நாளில் மாலை 6.00 மணிக்கு மேல் உங்கள் குலதெய்வம் மற்றும் முன்னோரை மனதால் நினைத்து வீட்டு வாசலிலே அல்லது பூஜை அறையிலோ ஒரு தீபம் ஏற்றுங்க. இதனால் பெருமாளின் அருளுடன் முன்னோர்களின் ஆசியும் குடும்பத்திற்கு கிடைக்கும். தவிர்க முடியாத காரணத்தால் தர்பணம், திதி செய்ய முடியாதவர்கள் இதை அவசியம் செய்வது நல்லது. வாசலில் தீபம் ஏற்றுவதால் மீண்டும் பிதுர்லோகத்திற்கு இன்று திரும்பும் முன்னோர், சாபங்களை நீக்கி, அதிர்ஷ்டம் மற்றும் செல்வ செழிப்பை தருவர் என்பது நம்பிகை. ஒரு மண் அகல் விளக்கு அல்லது பச்சரிசி மாவினால் செய்த விளக்கை பயன்படுத்துவது சிறந்ததாகும்.