வடரங்கம் பால வடரங்கநாதர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் கோலாகலம்
மயிலாடுதுறை: வடரங்கம் பால வடரங்கநாதர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் கோலாகலமாக நடைபெற்றது. நூற்றுக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே கொள்ளிடம் ஆற்றின் கரையோரம் உள்ள வடரங்கம் கிராமத்தில் 1000 ஆண்டுகள் பழமையான சோழர்கால கட்டிடக்கலை பாணியில் அமைந்துள்ள வசிஷ்ட முனிவரால் பிரதிஷ்டை செய்து பூஜிக்கப்பட்ட ரங்கநாயகி சமேத பால வட ரங்கநாதர் கோவில் உள்ளது. பிரசித்தி பெற்ற இக்கோவிலில் சனிக்கிழமை மற்றும் புரட்டாசி மாதங்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறும். இத்தலத்தில் பெருமாளையும், தாயாரையும் வழிபடுபவருக்கு நிறைந்த செல்வமும், மகிழ்வான வாழ்வும் கிடைக்கும் என்பது ஐதீகம். கோவிலில் புரட்டாசி மாத நான்காவது சனிக்கிழமையான இன்று ரங்க நாயகி சமேத பால வடரங்கநாதருக்கு திருக்கல்யாண உற்சவம் கோலாகலமாக நடைபெற்றது. இதனை முன்னிட்டு காலையில் பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனமும், தீப ஆராதனையும் நடைபெற்றது. தாயாருடன் பெருமாள் கோவிலில் இருந்து புறப்பட்டு வீதி உலாவாக வந்து கோவில் முன்பு அமைக்கப்பட்டு இருந்த மணமேடையில் எழுந்தருளினார். இதனை அடுத்து கிராம மக்கள் வெற்றி விநாயகர் கோவிலில் இருந்து திருமண சீர் வரிசைகளை எடுத்து வந்தனர். தொடர்ந்து மாலை மாற்றுதல், ஊஞ்சல் சேவை நடந்தது. 12 மணிக்கு திருமாங்கல்ய தாரணம், மங்கள ஆரத்தி நடந்தது. பூஜைகளை ரமேஷ் பட்டாச்சாரியார் செய்து வைத்தார். வடரங்கம் மற்றும் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு திருக்கல்யாண உற்சவத்தை கண்டு பெருமாளையும் தாயாரையும் தரிசித்து மனமுருக பிரார்த்தனை செய்தனர். திருக்கல்யாண ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் முருகன் செய்திருந்தார். ஆனைக்காரன் சத்திரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.