உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மழை வேண்டி பெண்கள் வீடு வீடாகச் சென்று மழைச் சோறு எடுத்து வழிபாடு

மழை வேண்டி பெண்கள் வீடு வீடாகச் சென்று மழைச் சோறு எடுத்து வழிபாடு

பல்லடம்: ஆறாக்குளம் கிராமத்தில், அம்மா சோறு, ஆத்தா சோறு என்று, மழை வேண்டி பெண்கள் மழைச்சோறு எடுத்து வழிபாடு செய்தனர்.


மழை பொய்த்து, வறட்சி நிலை ஏற்படும் காலகட்டங்களில், மழை வேண்டி மழைச்சோறு எடுத்து வழிபடுவதை கிராம மக்கள் பாரம்பரியமாக பின்பற்றி வருகின்றனர். முன்னோர்கள் கூறிச் சென்ற வழிமுறைகளை பின்பற்றி, மவைச்சோறு எடுத்து வழிபடுவதன் மூலம், மழை பெய்யும் என்பது கிராம மக்களின் நம்பிக்கை. அவ்வகையில், பல்லடத்தை அடுத்த, பருவாய் ஊராட்சி, ஆறாக்குளம் கிராமத்தில், மழை வேண்டி மழைச்சோறு எடுக்கும் நிகழ்வு நேற்று நடந்தது.


முன்னதாக, பெண்கள், தாய்மார்கள் உள்ளிட்டோர், ஊர்‌ நடுவே உள்ள மாரியம்மன் கோவில் திடலில் ஒன்று கூடினர். அங்குள்ள விநாயகரை வழிபட்ட பின், மழைச்சோறு எடுக்கும் நிகழ்வு துவங்கியது. அம்மா சோறு; ஆத்தா சோறு என்று கூறியபடியே, பெண்கள் வீடு வீடாகச் சென்று மழைச் சோறு எடுத்தனர். தொடர்ந்து, சேகரித்த உணவின் ஒரு பகுதியை அரச மரத்தடி விநாயகர் கோவிலில் வைத்து அதை துணியால் கட்டி, அங்குள்ள வேப்ப மரத்தின் மேல் கட்டப்பட்டது. இதனுடன் நவதானிய முடிப்பும் கட்டப்பட்டது. இதனையடுத்து, மழை வேண்டி அனைவரும் பிரார்த்தனை செய்தனர். இறுதியில், சேகரித்த மழைச்சோறை அனைவரும் பகிர்ந்து உண்டனர். 


இது குறித்து கிராம மக்கள் கூறுகையில், நடப்பு ஆண்டு மழை வராமல் கடும் வறட்சியை சந்தித்து வருகிறோம். பயிர்களை காப்பாற்ற முடியாமல் ஒருபுறமும், குடிப்பதற்கு தண்ணீர் பஞ்சம் மறுபுறம் என, தண்ணீருக்காக தவிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, முன்னோர் வழியை பின்பற்றி, மழைச்சோறு எடுக்கிறோம். மழை இன்றி கிராமத்தில் பஞ்சம் தலை விரித்து ஆடுவதால், இனி இந்த ஊரில் வசிக்க முடியாது. எனவே, இந்த ஊரை விட்டுச் செல்கிறோம் என்று கூறுவதுபோல், வீடு வீடாகச் சென்று மழைச்சோறு எடுப்போம். எங்களின் வேண்டுதலை ஏற்று, மாரியம்மா மழையாக பொழிவாள் என்பது பல ஆண்டு கால நம்பிக்கை. எங்களின் வழிபாட்டுக்கு இறங்கி, அம்மன் மழை தருவது நிச்சயம் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !