உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நவராத்திரி நான்காம் நாள்: பட்டாபிஷேக கோலத்தில் மதுரை மீனாட்சி அம்மன் அருள்பாலிப்பு

நவராத்திரி நான்காம் நாள்: பட்டாபிஷேக கோலத்தில் மதுரை மீனாட்சி அம்மன் அருள்பாலிப்பு

மதுரை: மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் நவராத்திரி விழாவின் நான்காம் நாள் விழாவில் அம்மன் பட்டாபிஷேக திருக்கோலத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாளித்தர். பக்தர்கள் ஏராளமானோர் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்


மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில்  நவராத்திரி விழா கடந்த 11ம்  தேதி துவங்கி வரும் அக்டோபர் 20 ஆம் தேதி வரை 10 நாட்கள் நடைபெறுகிறது.கோயிலில் நவராத்திரி திருவிழா நடைபெற்று வரும் நாட்களில் கொலுச்சாவடியில் எழுந்தருளும் உற்சவ அம்மனுக்கு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதவிதமான சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு வருகின்றன.


அதன்படி, ராஜராஜேஸ்வரி அலங்காரம், அர்த்தநாரீஸ்வரர் திருக்கோலம், கோலாட்ட திருக்கோலம், ஆகியவற்றின் தொடர்ச்சியாக நான்காம் நாள் விழாவில் அம்மன் பட்டாபிஷேக திருக்கோலத்தில் செங்கோல் ஏந்தி, நாடாளும் மன்னராக எழுந்தருளி பக்தர்களுக்குக் காட்சி அளித்தார். ராஜ அலங்கார ஆடை, ஆபரணத்துடன் பாண்டியருக்குரிய வேப்பம்பூ மாலை சூடி பட்டாபிஷேக கோலத்தில் எழுந்தருளும் அன்னை மீனாட்சியைத் தரிசித்தால் மன நிறைவான வாழ்வு அமையும் என்பதால் பக்தர்கள் ஏராளமானோர் கோயிலுக்கு வந்திருந்து பட்டாபிஷேக திருக்கோல அம்மனை மனமுருக வழிபட்டனர்.


தொடர்ந்து வரும் நாட்களில் தபசு அலங்காரம், ஊஞ்சல் உற்சவம், முத்தங்கி சேவை, மஹிஷாசுரமர்த்தினி காட்சி, சிவபூஜை, மற்றும் விஜயதசமி சடையலம்புதல், போன்ற அலங்காரங்களில் உற்சவர் அம்மன் கொலுமண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிக்க உள்ளார். நவராத்திரியை முன்னிட்டு காலை மாலை வேளைகளில் கோயில் திருக்கல்யாண மண்டபத்தில் திருமுறை இன்னிசை, பக்தி இன்னிசை, பரதநாட்டியம், ஆன்மீகச் சொற்பொழிவுகள் மற்றும் கரகாட்டம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. நவராத்திரி விழாவை முன்னிட்டு  ஆயிரக்கணக்கான பக்தர்கள்  கோவிலுக்கு வந்திருந்து கொலுமண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ள கொலுக்காட்சியை பார்வையிட்டு  பட்டாபிஷேக திருக்கோல அம்மனையும் வழிபாடு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !