திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் ஐப்பசி திருக்கல்யாணம் கோலாகலம்: பக்தர்கள் பரவசம்
திருநெல்வேலி: தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. இதையொட்டி அதிகாலை ஒரு மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு சுவாமி நெல்லையப்பர், காந்திமதி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து திருமணக் கோலத்தில் காட்சியளித்த காந்திமதி அம்பாளுக்கு சர்வ ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டு ஆயிரங்கால் மண்டபத்தில் உள்ள மணமேடையில் திருமண கோலத்தில் அம்பாள் எழுந்தருளினார்.
சுவாமி சன்னதியில் இருந்து தங்கக் கவசம் அணிவிக்கப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் மாப்பிள்ளைக் கோலத்தில் தங்கப் பல்லக்கில் எழுந்தருளிய சுவாமி நெல்லையப்பர் மேளதாளங்கள் முழங்க ஆயிரங்கால் மண்டபம் வந்தடைந்தார். அங்கு நெல்லை கோவிந்தர் சுவாமிக்கு பாதாபிஷேகம் செய்து மாப்பிள்ளை அழைப்பு நடைபெற்றது. தொடர்ந்து மணமேடைக்கு எழுந்தருளிய சுவாமி நெல்லையப்பர், காந்திமதி அம்பாளுக்கு மாலை மாற்றும் உற்சவம் நடைபெற்றது. யாகசாலை பூஜைகளைத் தொடர்ந்து காந்திமதி அம்பாளுக்கு திருமாங்கல்யம் அணிவிக்கப்பட்டு திருக்கல்யாண உற்சவம் வெகு விமரிசையாக நடைபெற்றது. பின்னர் ஷோடச உபசார மகா தீபாராதனை நடைபெற்றது. விழாவில் பங்கேற்ற பக்தர்களுக்கு திருமாங்கல்ய சரடு உள்ளிட்ட மங்களப் பொருட்கள் வழங்கப்பட்டன. திருக்கல்யாண விருந்தும் நடைபெற்றது. அதிகாலையிலேயே ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு திருமணக் கோலத்தில் காட்சியளித்த சுவாமி அம்பாளை தரிசனம் செய்தனர்.