உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / இங்கு தீபாவளி.. நேபாளத்தில் ‘திஹார்’ திருவிழா!

இங்கு தீபாவளி.. நேபாளத்தில் ‘திஹார்’ திருவிழா!

தீபாவளியை, தீப ஒளி திருநாள் என கொண்டாடுகிறோம். இதையே அண்டை நாடான நேபாளத்தில், ‘திஹார்’ என்ற பெயரில் கொண்டாடி மகிழ்கின்றனர். இந்த சொல்லுக்கு ஒளித்திருவிழா என்பது பொருள். நேபாள நாட்டில் பண்டிகையின் போது உறவினரை மட்டுமின்றி விலங்கு, பறவைகளை போற்றுவதும் தீபாவளி திருநாளில் வழக்கமாக உள்ளது. இதற்காக ஐந்து நாட்கள் விழா நடத்தப்படுகிறது. இது பற்றி பார்ப்போம்...


நேபாளத்தில் தீபாவளி பண்டிகையின் முதல்நாள் ‘காக் திஹார்’ எனப்படுகிறது. அது காகங்களுக்கு உணவளிக்கும் விழாவாக நடத்தப்படுகிறது. வீட்டு மாடி அல்லது கூரையில் காகங்களுக்கு உணவு வகைகளை படைத்து, கூவி அழைத்து உண்ணச் செய்வர். காகங்கள் முன்னோரின் துாதுவர் என்ற நம்பிக்கை அங்கும் நிலவுகிறது. இவ்வாறு செய்வதால் முன்னோர் வழியாக நல்ல செய்திகள் வரும்; அதிர்ஷ்டம் தேடி வரும் என நம்புகின்றனர் நேபாள மக்கள். காகம் வந்து உணவை எடுக்கும் வரை காத்திருப்பர்; அது, உண்ட உடன் மகிழ்ச்சி ஆரவாரம் செய்வர்.


இரண்டாம் நாள், ‘குகுர் திஹார்’ எனப்படுகிறது. இது நாய்களை கவுரவிக்கும் திருவிழா. அன்று வீட்டு நாய்களோ, தெரு நாய்களோ எதுவாக இருந்தாலும் மரியாதை செய்கின்றனர். அவற்றுக்கு பொட்டு வைத்து, உடலில் வண்ணம் பூசி, மாலை அணிவித்து, உணவு அளித்து வழிபாடு செய்வர். நாயிடம் நன்றியை கற்றுக் கொள்ளவும், பாதுகாப்பில் கவனமாக இருக்கவும் குழந்தைகளுக்கு சொல்லித் தருகின்றனர். அன்று ‘தேயுசிரோ பைலோ’ என்ற பிரபல பாடல் குழந்தைகள் குழுவால் பாடப்படுகிறது. இதில், ‘தேயுசிரோ’ என்ற சொல் திரும்பத் திரும்ப வரும். ‘தேயு’ என்றால் தலை... ‘சிரோ’ என்றால் கொடு. மகாபலி மன்னன், விஷ்ணுவுக்காக தலையைக் கொடுத்தது போல், லட்சுமி தரும் செல்வத்தை பிறருக்கு கொடுத்து உதவ வேண்டும் என்பதே இப்பாடலின் மையக்கருத்து. இதை சிறுவர் – சிறுமியர் குழு வீடு வீடாக சென்று பாடுவர். பாடும் குழுவுக்கு பணமும், இனிப்பும் பரிசாக வழங்கப்படும்.


மூன்றாம் நாள் விழா, ‘காய் திஹார்’ எனப்படுகிறது. இது, பசுக்களை போற்றும் விழாவாக கொண்டாடப் படுகிறது. பசுவை குளிப்பாட்டி, ‘டிகா’ என்ற பொட்டு வைத்து, அலங்கரித்து, பூஜை செய்வர். அன்று மாலை வீடுகளில் ரங்கோலி வரைந்து, விளக்கு ஏற்றி லட்சுமி பூஜை நடத்தப்படுகிறது. அப்போதும், ‘தேயுசிரோ பைலோ’ என்ற பாடல் பாடப்படும். சில வீடுகளில் மகா பூஜை என்ற, ‘தன்னைத் தானே வணங்கும்’ நிகழ்ச்சியும் நடத்தப்படுகிறது. இறைவன் கொடுத்த இந்த உடலை பாதுகாப்பாக பேணுவதே நம் கடமை என்பதை உணர்த்தவே இந்த விழா நடத்தப்படுகிறது. இதன் வழியாக உடலுக்கு கேடு விளைவிக்கும் பழக்க வழக்கங்களுக்கு விடை கொடுக்க வேண்டும் என உறுதி ஏற்பு நடக்கிறது. நான்காம் நாள் கொண்டாட்டமாக கோவர்த்தன பூஜை நடக்கும். அன்று, காளைகளுக்கு சிறப்பு பூஜை நடக்கும். கிருஷ்ணர், மழை, மலைகளுக்கு பூஜை செய்து வணங்குவர். ஐந்தாம் நாள் விழா, ‘பாய் டிகா’ எனப்படுகிறது. அன்று சகோதரர்களின் நெற்றியில் ஏழு வண்ண பொட்டு வைப்பர் சகோதரியர். அவர்களுக்கு மாலை சூட்டி நீண்ட காலம் வாழ பிரார்த்திப்பர் சகோதரர்கள். தக்க பரிசுகளும் வழங்குவர். தீபாவளி பண்டிகையின் முதல் நாள் தொடங்கி, ஐந்து நாட்கள் இவை தொடர்ந்து நடக்கும். இதுபோல் அர்த்தப்பூர்வமாக தீபாவளியை நாமும் மகிழ்ச்சியுடன் கொண்டாடுவோம்.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !