பக்தியே பகவானுக்கு உகந்த காணிக்கை:சிருங்கேரி ஸ்ரீபாரதீ தீர்த்த சுவாமிகள் தீபாவளி அருளாசி
‘‘ஜகத்குரு சங்கராசார்ய ஸ்ரீ அபிநவ வித்யாதீர்த்த சுவாமிகளை, தீபாவளி நன்னாளில் இடைவிடாது தியானிப்பதன் மூலமாக, ஆன்மாவுக்கு நன்மை தரும் நிரந்தரமான ஆனந்தத்தைப் பெறலாம்,’’ என, சிருங்கேரி ஸ்ரீ சாரதாபீடம் ஜகத்குரு சங்கராசார்ய ஸ்ரீ பாரதீ தீர்த்த மஹா சுவாமிகள் கூறியுள்ளார்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, பக்தர்களுக்கு சுவாமிகள் வழங்கியுள்ள அருளாசி:
பகவான் நாம் சமர்ப்பிப்பதை ஏற்றுக்கொள்வாரா, மாட்டாரா என்ற சந்தேகம் நமக்கு இருக்கிறது. ‘நாங்கள் இவ்வளவு படைக்கிறோம்... பகவான் இதையெல்லாம் ஏற்றுக்கொள்கிறாரா, இல்லையா? நாங்கள் சமர்ப்பித்தது அப்படியே இருக்கிறதே’ என்று கேட்கின்றனர்.
‘பகவானை அழைத்தால் அவர் பதிலளிப்பாரா, மாட்டாரா?’ என்றும் சந்தேகிக்கின்றனர். திரவுபதியை போல நீ அழைத்தால், உனக்கும் பகவான் பதிலளிப்பார். அதேபோல, ‘பகவான் நாம் சமர்ப்பிப்பதை ஏற்றுக்கொள்வாரா, மாட்டாரா?’ என்று சந்தேகப்படுகின்றனர். சபரியை போல நீ சமர்ப்பித்தால், நீ கொடுப்பதையும் பகவான் ஏற்றுக்கொள்வார் என ஆன்மிக சான்றோர்கள் கூறியுள்ளனர்.
அத்தகைய பாவனையும், பக்தியும் நமக்கு இருக்க வேண்டும். நாம் பக்தியோடு எதை சமர்ப்பித்தாலும், பகவான் நிச்சயமாக ஏற்றுக்கொள்வார். பக்தி இல்லையென்றால் எதையும் ஏற்க மாட்டார்.
பாண்டவரின் துாதராக, கவுரவர் சபைக்கு சென்ற கிருஷ்ணர், துரியோதனன், துச்சாதனன் அளித்த உபசரிப்பை ஏற்கவில்லை. ‘தங்க தட்டுகள் வேண்டாம்; எனக்கு தேவை பக்திதான்! உன்னுடைய மனத்தில் சிறிதளவு கூட பக்தி இல்லை. அப்படியிருக்க, உன்னுடைய விருந்து எதற்கு? விதுரருடைய மனமோ பக்தியால் பரிபூர்ணமாக இருக்கிறது. எனக்கு விதுரருடைய உபசாரம் தான் வேண்டும்’ என்று கிருஷ்ணர் கூறினாராம். பகவான் பக்தியைத்தான் பார்க்கிறார்; வெளி ஆடம்பரத்தைப் பார்ப்பதில்லை.
ஒவ்வொருவரும் பகவானுடைய கிருபைக்குப் பாத்திரமாக வேண்டும் என்ற நோக்கத்துடன், முன்னோர்கள் எண்ணிலடங்கா ஸ்தோத்திரங்களை இயற்றியுள்ளனர். ஸ்தோத்திரங்களில் ஏதேனும் ஒரு ஸ்தோத்திரத்தை நாம் பக்திபாவத்துடன் பாராயணம் செய்தாலும், நமக்குப் பகவானுடைய அனுக்ரஹம் நிச்சயமாக கிடைக்கும்.
கிருஷ்ணபரமாத்மா, நரகாசுரனை வதம் செய்த பிறகு, உலக மக்களுக்கு தீபாவளியை வழங்கியுள்ளார். இந்நன்னாளில், பகவானின் ஸ்தோத்திரத்தைப் பாராயணம் செய்ய வேண்டும். பக்தியை வளர்க்க, தீபாவளி நாளில் அவதரித்து, உலக மக்களுக்கு அனுக்ரஹம் செய்த குருநாதர், 35-வது பீடாதிபதி ஜகத்குரு சங்கராசார்ய ஸ்ரீ அபிநவ வித்யாதீர்த்த சுவாமிகளை, அனைவரும் இத்தினத்தில் இடைவிடாது தியானிப்பதன் மூலமாக, ஆன்மாவுக்கு நன்மை தரும் நிரந்தரமான ஆனந்தத்தைப் பெறலாம். இவ்வாறு, ஸ்ரீ பாரதீ தீர்த்த மஹா சுவாமிகள் அருளாசி வழங்கியுள்ளார்.