மாமல்லபுரத்தில் உலக நன்மைக்காக யாகம்: அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா பக்தர்கள் பங்கேற்பு
மாமல்லபுரம்: உலக நன்மை வேண்டி, மாமல்லபுரத்தில் நடந்த யாகத்தில், சர்வதேச சுற்றுலா பயணியர் சங்கல்பம் மேற்கொண்டனர்.
மாமல்லபுரம் சுற்றுலா இடமாக திகழ்கிறது. இங்குள்ள பல்லவர் கால பாரம்பரிய நினைவுச்சின்னங்களை, இந்திய பயணியர் மட்டுமின்றி, சர்வதேச பயணியரும் கண்டு மகிழ்கின்றனர். இங்கு ஆண்டு இறுதியில் திரளும் சர்வதேச பயணியர், இந்திய பாரம்பரிய சடங்கு முறைகளை அறிய ஆர்வம் காட்டுகின்றனர்.
இந்து மதத்தவர், உலக நன்மை வேண்டி நடத்தும் யாக நடைமுறையை கேட்டறிந்து வியக்கின்றனர். தற்போது சுற்றுலா வந்துள்ள பல நாட்டுப் பயணியர், வெவ்வேறு நாடுகளில் நிலவும் போர் சூழல், பொருளாதார வீழ்ச்சி, நாடுகள் பாதிப்பு உள்ளிட்டவை நீங்கி, மக்கள் நலமுடன் வாழ கருதி, மாமல்லபுரத்தில் நேற்று, யாகம் நடத்தினர். இங்குள்ள ஸ்தலசயன பெருமாள் கோவிலின் புண்டரீக புஷ்கரணி குளக்கரையில், அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா ஆகிய நாடுகளைச் சேர்ந்த 10 பேர், குங்கும திலகமிட்டு, மலர்மாலை அணிந்து பங்கேற்றனர். பட்டாச்சாரியார்கள் யாகம் வளர்த்து, வேதமந்திரங்கள் முழங்க, உலக நன்மை வேண்டி பயணியர் சங்கல்பம் செய்தனர்.