கல்பாத்தி கோவில் தேர் திருவிழா கொடியேற்றம் கோலாகலம்
பாலக்காடு: கேரள மாநிலம், பாலக்காட்டில் பிரசித்தி பெற்ற, கல்பாத்தி விசாலாட்சி சமேத விஸ்வநாதர் கோவிலில் தேர் திருவிழா கொடியேற்றம் கோலாகலமாக நடந்தது.
கேரள மாநிலம், பாலக்காட்டில் கல்பாத்தி விசாலாட்சி சமேத விஸ்வநாதர் கோவில் உள்ளது. இங்கு, ஆண்டு தோறும் ஐப்பசி மாதம் தேர் திருவிழா நடப்பது வழக்கம். நடப்பாண்டு தேர் திருவிழா, இன்ற காலை, 7:30 மணிக்கு துவங்கியது. வாஸ்து சாந்தி, வாஸ்து ஹோமம், வாஸ்து பலி, வேத பாராயணம் ஆகியவை நடந்தன. காலை, 11:34 மணிக்கு சிவ சிவ சங்கர ஹர ஹர சங்கர கோஷங்கள் முழங்க, கோவில் மேல்சாந்தி பிரபு சேனாபதியின் தலைமையில் கொடியேற்றம் நடந்தது.
விழா நடக்கும் உப கோவில்களான, மந்தக்கரை மகா கணபதி கோவிலில் குமார் சிவாச்சாரியார் பழைய கல்பாத்தி லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில் ராமமூர்த்தி பாட்டாச்சாரியார் தலைமையிலும், சாத்தபுரம் பிரசன்ன மஹா கணபதி கோவிலில் ஸ்ரீகாந்த் பட்டாச்சாரியார் தலைமையிலும் கொடியேற்றம் நடந்தது. தேர் திருவிழாவை முன்னிட்டு, மாவட்ட சுற்றுலா மேம்பாட்டு கவுன்சில் கலாசார துறையின் ஒத்துழைப்புடன், ஐந்து நாட்கள் நடக்கும் சங்கீத உற் சவத்தை, இன்று மாலை, 6:00 மணிக்கு சாத்தபுரம் மணி அய்யர் சாலையில், சுற்றுலாத்துறை அமைச்சர் விஷ்ணுநாத் துவக்கி வைக்கிறார்.
வரும், 14, 15, 16 தேதிகளில், திருத்தேரோட் டம் நடத்தப்படுகிறது. திருவிழாவின் சிறப்பு அம்சங்களில் ஒன்றான, ரத சங்கமம் 16ம் தேதி மாலை நடக்கிறது. அன்று பாலக்காடு தாலுகாவுக்கு உட்பட்ட பகுதிகளுக்கு, உள்ளூர் விடுமுறை அளித்து, பாலக்காடு மாவட்ட கலெக்டர் சுதீர் உத்தரவிட்டுள்ளார்.