திருச்செந்தூர் முருகன் கோயிலில் கந்தசஷ்டி விழா துவங்கியது: கொட்டும் மழையில் பக்தர்கள் தரிசனம்
திருச்செந்தூர்: உலகப் புகழ்பெற்ற திருச்செந்தூர் முருகன் கோவில் கந்தசஷ்டி திருவிழா யாகசாலை பூஜைகளுடன் துவங்கியது.
ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாத வளர்பிறை பிரதமை திதியில் தொடங்கி, சஷ்டி திதி வரையான 6 நாட்களில் கந்தசஷ்டி விரதம் மேற்கொள்ளப்படுகிறது. முருகன் கோவில்களில் இன்று முதல் 6வது நாள் சூரசம்ஹார நிகழ்வு நடைபெறும். இந்த கந்த சஷ்டி விரதமானது, முருகனின் ஆறுபடை வீடுகளில் 2ம் வீடான திருச்செந்தூரில் சிறப்பாக நடக்கும். உலகப் புகழ்பெற்ற கந்தசஷ்டி திருவிழா திருச்செந்தூர் முருகன் கோவிலில் இன்று யாகசாலை பூஜைகளுடன் துவங்கியது. முன்னதாக நள்ளிரவு 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, காலை 5.25 மணிக்கு ஜெயந்திநாதர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கொட்டும் மழையில் பக்தர்கள் தரிசனம் செய்தனர். இன்று முதல் நவம்பர் 16ம் தேதி வரை நடைபெறவுள்ள கந்தசஷ்டி பெருவிழாவில், நவம்பர் 15ம் தேதி சூரசம்ஹாரமும், நவம்பர் 16ம் தேதி திருக்கல்யாணமும் நடைபெறவுள்ளன.
பக்தர்களின் வசதிக்காக சிறப்பு ஏற்பாடு: பக்தர்களின் வசதிக்காக முக்கிய ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 11 இடங்களில் 1,02,673 சதுரடி பரப்பளவில் நிழற்கொட்டகைகள், 300 தற்காலிகக் கழிவறைகள் மற்றும் குடிநீர் வசதிகள், 15,000 பக்தர்களுக்கு நாள் முழுவதும் அறுசுவை உணவு, முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்காக 4 கட்டணமில்லா சுற்றுப் பேருந்துகள், 6 லட்சம் குடிநீர் பாட்டில்கள் மற்றும் 1 லட்சம் பிஸ்கட் பாக்கெட்டுகள், 493 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள், 10,000 வாகனங்கள் நிறுத்தும் வகையில் வாகன நிறுத்தங்கள், 5,000-க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்புப் பணியில் உள்ளனர். மேலும் சிறப்பு மருத்துவ முகாம்கள் மற்றும் தயார் நிலையில் ஆம்புலன்ஸ் வாகனங்கள், 26 இடங்களில் பெரிய அளவிலான LED திரைகள், 400 தூய்மைப் பணியாளர்கள் மூலம் சுகாதாரப் பணிகள் செய்யப்பட்டுள்ளது. மேலும், கடலில் நீராடும் பக்தர்களின் பாதுகாப்பிற்காக கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளது.