விருத்தகிரீஸ்வரர் கோவில் கோபுரத்திற்கு ஆபத்து!
விருத்தாசலம்: கடலூர் மாவட்டம், விருத்தாசலத்தில் உள்ள, 1,500 ஆண்டுகள் பழமை வாய்ந்த, விருத்தகிரீஸ்வரர் கோவில், பராமரிப்பின்றி அரச மரம், ஆலங்கன்றுகள், செடிகள் வளர்ந்து, வேர்கள் ஊடுருவுவதால், கோபுரம் பலவீனமடைந்து, ஆபத்து ஏற்பட்டுள்ளது. காசிக்கு வீசம் அதிகம் விருத்தகாசி என, ஆன்றோர்களால் போற்றப்படும், திருமுதுகுன்றம் என்ற கடலூர் மாவட்டம், விருத்தாசலம் மணிமுக்தாற்றின் கரையில், 1,500 ஆண்டுகளுக்கு முன், விபச்சித்து முனிவர் சிவபெருமானை பிரதிஷ்டை செய்து, திருப்பணியை துவங்கியது தான் விருத்தகிரீஸ்வரர் கோவில்.சித்தர் காலத்திற்குப் பிறகு, கண்டராதித்தசோழன் மனைவி செம்பியன்மாதேவி, ராஜராஜசோழன் மனைவி ஏழிசைமோகனான, குலோத்துங்க சோழன், காடவராதித்தன், வையப்ப கிருஷ்ணநாயக்கர், கச்சிராயர், வீரசேகர செவ்வப்ப நாயக்கர், முத்து கிருஷ்ணப்ப நாயக்கர் ஆகியோர் திருப்பணிகளை செய்துள்ளனர் என்பது, இக்கோவிலின் பழமைக்கு சான்று.மணிமுக்தாற்றில் குளித்து, விருத்தகிரீஸ்வரரை வழிபட்டால், காசிக்குச் சென்று வந்த புண்ணியம் கிடைக்கும் என்பது ஐதீகம். தமிழகம் மற்றும் வெளி மாநிலங்களிலிருந்தும், ஏராளமான பக்தர்கள், இக்கோவிலுக்கு வந்து, விருத்தகிரீஸ்வரரை வழிபட்டுச் செல்கின்றனர்.ஐந்து கோபுரங்கள், ஐந்து கொடிமரம், ஐந்து பிரகாரம், ஐந்து தேர் இக்கோவிலின் சிறப்பம்சங்கள்.இந்து அறநிலையத்துறையின் கீழ் உள்ள இக்கோவில் கோபுரத்தில், ஏராளமான ஆலம், அரசங்கன்றுகள், செடி, கொடிகள் அதிகளவில் வளர்ந்து, வேர்கள் ஊடுருவுவதால், கோபுரம் பலவீனமடைந்து, அதிலுள்ள கலை நயமிக்க அழகிய சிலைகள் உடைந்து கீழே விழுகின்றன. கோபுரத்தின் உறுதித் தன்மை, நாளுக்கு நாள் பலவீனமடைந்து வருவதால், ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது.சித்தர்கள், சோழர்கள், நாயக்கர்களால் திருப்பணி செய்யப்பட்டு, 1,500 ஆண்டுகள் பழமை வாய்ந்த விருத்தகிரீஸ்வரர் கோவிலுக்கு, இந்து சமய அறநிலையத்துறை முக்கியத்துவம் கொடுத்து, கோபுரங்களில் வளர்ந்துள்ள மரம், செடிகள், கொடிகளை அகற்றி, பழுதடைந்துள்ள கோபுரத்தை சீரமைக்க, துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.