உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பரங்குன்றத்தில் பச்சைசாத்தி கோலத்தில் சண்முகர்: ஒரே நாளில் இரண்டு விழாக்களால் பக்தர்கள் மகிழ்ச்சி

திருப்பரங்குன்றத்தில் பச்சைசாத்தி கோலத்தில் சண்முகர்: ஒரே நாளில் இரண்டு விழாக்களால் பக்தர்கள் மகிழ்ச்சி

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நவ. 16 அன்று கந்த சஷ்டி திருவிழா நிறைவாக சட்ட தேரோட்டமும், அன்று கார்த்திகை தீப திருவிழா கொடியேற்றமும் நடக்கிறது. கோயிலில் நவ. 10ல் கந்த சஷ்டி விழா சுவாமிகளுக்கும், பக்தர்களுக்கும் காப்பு கட்டுடன் துவங்கியது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் காப்பு கட்டி கோயில் மண்டபங்களிலும், புதிய சஷ்டி மண்டபத்திலும் தங்கி விரதம் மேற்கொண்டு வருகின்றனர். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நவ. 14ல் வேல் வாங்கும் நிகழ்ச்சியும் நவ 15ல் சூரசம்ஹாரம் நவ 16 காலை 8:30 மணிக்கு ரத வீதிகள், கிரி வீதிகளில் சட்ட தேரோட்டம் நடக்கிறது. அன்று காலை 7:00 மணிக்கு கார்த்திகை தீப திருவிழாவிற்கான கொடியேற்றம் நடக்கிறது.


சஷ்டி யாகசாலை பூஜை: கோயிலில் தினம் காலையில் யாகசாலை பூஜை நடக்கிறது. நவ. 10முதல் விசாக கொறடு மண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ள யாகசாலையில் சுப்பிரமணிய சுவாமிக்கு தங்குடம், வள்ளி, தெய்வானைக்கு வெள்ளி குடங்கள், பரிவார மூர்த்திகளுக்கு வெள்ளி சொம்புகளில் புனித்தீர் நிரப்பி வைக்கப்பட்டு, விக்னேஷ்வர பூஜை, கும்ப பூஜை முடிந்து தீபாராதனைகள் நடக்கிறது. நவ. 14 காலையில் சண்முகருக்கு தங்க குடத்திலுள்ள புனித நீரால் அபிஷேகம் செய்யப்படும். 


பச்சைசாத்தி அலங்காரம்: கந்த சஷ்டி 3ம் நாள் திருவிழாவான இன்று காலை சண்முகர், வள்ளி, தெய்வானைக்கு பச்சை வஸ்திரங்கள் சாத்துப்படி செய்யப்பட்டு, பச்சை நகை அலங்காரங்கள், துளசி மாலை அணிவிக்கப்பட்டது. உற்ஸவர் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை சிறப்பு அலங்காரத்தில் மயில்வாகனத்தில் அருள் பாலித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !