வேம்பத்தூர் சித்தி விநாயகர் கோயிலில் பந்தக்கால் நடும் விழா
மானாமதுரை: மானாமதுரை அருகே வேம்பத்தூர் கிராமத்தில் உள்ள சித்தி விநாயகர் கோயிலில் கும்பாபிஷேக விழாவிற்காக நடைபெற்ற பந்தக்கால் நடும் விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
வேம்பத்தூர் கற்பக விநாயகபுரம் பகுதியில் உள்ள சித்தி விநாயகர் கோயிலில் கும்பாபிஷேக விழாவிற்காக நடைபெற்று வந்த திருப்பணிகள் முடிவு பெற்றதை அடுத்து வருகிற 22ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. முன்னதாக 21ஆம் தேதி காலை கணபதி ஹோமத்துடன் இரண்டு கால யாகசாலை பூஜைகள் சிவாச்சாரியார்கள் சிங்கம்புணரி சேவகன் மூர்த்தி கோயில் பரம்பரை ஸ்தானிகர் சேவற்கொடியோன் விளாச்சேரி தண்டபாணி கோயில் சிவாச்சாரியார் கருப்புசாமி சிவம் ஆகியோர் தலைமையில் துவங்கி நடைபெற உள்ளது. இதற்காக நேற்று கோயில் வளாகத்தில் யாகசாலைகள் கட்டுவதற்காக பந்தக்கால் நடும் பூஜை நடைபெற்றதை முன்னிட்டு அதிகாலை விநாயகருக்கு சிறப்பு பூஜைகள், அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. பின்னர் பந்தக்கால் நடப்பட்டு அதற்கும் பூஜைகள் நடைபெற்றது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கிராம மக்கள் கலந்து கொண்டனர்.