நாகதோஷத்தை போக்கும் சிவாஜி நகரின் நாகம்மா
ADDED :33 minutes ago
பெங்களூரின் சிவாஜி நகரில் அமைந்துள்ள நாகம்மா கோவில், பிரபலமான கோவில்களில் ஒன்றாகும். இங்கு குடி கொண்டுள்ள நாகம்மாவுக்கு, லட்சக்கணக்கான பக்தர்கள் உள்ளனர்.
பெங்களூரு சிவாஜி நகரின் வீரப்பிள்ளை வீதியில், நாகம்மா கோவில் அமைந்துள்ளது. சிவாஜி நகர் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில், தமிழர்கள் அதிகம் வசிக்கின்றனர். இவர்கள் நாகம்மாவின் பக்தர்கள். இவர்களின் ஒத்துழைப்பில், கோவில் பராமரிக்கப்படுகிறது. கோவிலில் இயற்கையாக உருவான புற்று உள்ளது. இதனால், இங்கு குடி கொண்டுள்ள அம்பாளுக்கு, நாகம்மா என பெயர் வந்துள்ளது.
அமாவாசை
இங்கு குடிகொண்டுள்ள அம்பாளை தரிசனம் செய்து, பிரார்த்தனை செய்தால் கேட்டது கிடைக்கும் என, பக்தர்கள் நம்புகின்றனர். குறிப்பாக நாக தோஷங்கள் நீங்கும். திருமண தடை நீங்கும். வாழ்க்கையில் கஷ்டங்கள் மறையும்.
சக்தி வாய்ந்த அம்மன் என்பதால், கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை, நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. கோவிலில் நடக்கும் திருவிழாக்கள், மிகவும் பிரசித்தி பெற்றவையாகும். ஆண்டுதோறும் ஆடி, ஆவணி மாதங்களில் நாகபஞ்சமியை முன்னிட்டு, பிரம்ம ரத உற்சவம் வெகு விமரிசையாக நடக்கும். மஹா சண்டி ஹோமம் நடக்கும். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பர்.
நவராத்திரி
நாக தோஷம் நீங்கவும், திருமண தடை நீங்கவும், குழந்தை வரம் வேண்டியும் பக்தர்கள் நாக பிரதிஷ்டை செய்தும், மாவிளக்கு ஏற்றியும் வழிபடுகின்றனர்.
ஆரம்ப நாட்களில் மிக சிறிதாக இருந்த கோவில், இப்போது பெரிதாக கட்டப்பட்டுள்ளது. சனீஸ்வரன், ஆஞ்சநேயர் சன்னதிகள் கட்டப்பட்டுள்ளன. சனிக்கிழமைகளில் இங்கு அதிக பக்தர்கள் வருகின்றனர்.
எப்படி செல்வது?
பெங்களூரின் மிகவும் பழமையான பகுதியான சிவாஜிநகரில், நாகம்மா கோவில் அமைந்துள்ளது. பெங்களூரின் மல்லேஸ்வரம், யஷ்வந்த்பூர், கோரமங்களா, இந்திரா நகர் உட்பட அனைத்து பகுதிகளில் இருந்தும், சிவாஜிநகருக்கு பி.எம்.டி.சி., பஸ்கள் இயக்கப்படுகின்றன.
ஆட்டோ, வாடகைக்கார் வசதியும் உள்ளது. சிவாஜிநகர் பஸ் நிலையத்தில் இறங்கி, நடந்தே கோவிலுக்கு செல்லலாம். மெட்ரோ ரயிலில் எம்.ஜி.சாலைக்கு வந்து, அங்கிருந்து ஆட்டோ, வாடகைக்காரில் கோவிலுக்கு செல்லலாம்.
அருகில் உள்ள கோவில்கள்: ஒடுக்கத்துார் முருகன் கோவில், ரேணுகா பரமேஸ்வரி கோவில், அங்காள பரமேஸ்வரி கோவில், ஓம் சக்தி கோவில், படவேட்டம்மன் கோவில், முத்தாலம்மன் கோவில், சோமேஸ்வரர் கோவில், மீனாட்சி அம்மன் கோவில், தர்மராஜா கோவில், ராமர் கோவில்.