தமிழகம் முழுவதும் முருகன் கோவில்களில் திருக்கல்யாண உற்சவம்: பக்தர்கள் பக்தி பரவசம்
விழுப்புரம்
விழுப்புரம் என்.ஜி.ஜி.ஓ., காலனி பாலமுருகன் கோவிலில் கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு திருக்கல்யாண உற்சவம் நடந்தது. விழாவையொட்டி, நேற்று மாலை 6:00 மணிக்கு மூலவர் பாலமுருகன் மற்றும் உற்சவ மூர்த்திகளுக்கு பால், சந்தனம், பன்னீர் உள்ளிட்ட திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. இரவு 8:00 மணிக்கு வேத மந்திரங்கள் முழங்க சுவாமிக்கு திருக்கல்யாண வைபவம் நடந்தது. இதில், மூலவர் மற்றும் உற்சவர் சுவாமிகள் சிறப்பு மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு காசி விஸ்வநாதர் கோயிலில் கந்த சஷ்டி விழாவின் இறுதி நாளான நேற்று காலை சஷ்டி மண்டபத்தில் முருகன், வள்ளி, தெய்வானை எழுந்தருளினர். திருக்கல்யாண சடங்குகள், சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு தேவியர் இருவருக்கும் சுவாமி மாங்கல்யம் அணிவித்தார். அப்போது பக்தர்கள் அரோகரா கோஷம் எழுப்பி வழிபட்டனர். சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமான மக்கள் பங்கேற்றனர்.
* ஸ்ரீவில்லிபுத்துார் மடவார் வளாகம் வைத்தியநாத சுவாமி கோயிலில் நேற்று மாலை 6:30 மணிக்கு . வசந்த மண்டபத்தில் முருகன், வள்ளி, தெய்வானை எழுந்தருளினர். அப்போது திருமண சடங்குகள் மற்றும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு கோயில் பட்டர்கள் திருக்கல்யாண வைபவத்தை நடத்தினர். திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
*அருப்புக்கோட்டையில் பாலையம்பட்டி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டியை முன்னிட்டு சுப்பிரமணியர் தேவசேனா திருக்கல்யாணம் நடந்தது. இருவரும் திருக்கல்யாண கோலத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். அருப்புக்கோட்டை புளியம்பட்டி சித்தி விநாயகர் கோயிலில் திருக்கல்யாணம் நடந்தது. சாமிக்கு அபிஷேக ஆராதனை நடந்தது திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் குண்டுக்கரை சுவாமிநாத சுவாமி மற்றும் வழிவிடு முருகன், பெருவயல் சிவசுப்பிரமணிய சுவாமி என்ற ரெணபலி முருகன் கோயில் உள்ளிட்ட கோயில்களில் நவ.,10 முதல் கந்தசஷ்டி விழா நடந்தது. இவ்விழாவில் நேற்று முன்தினம் கந்த சஷ்டியை முன்னிட்டு முருகர் சூரனை வதம் செய்யும் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடந்தது.
பெருவயல் ரெணபலி முருகன் கோயில், ராமநாதபுரம் வழிவிடுமுருகன் கோயில், பட்டணம்காத்தான் கலெக்டர் அலுவலகம் அருகே வினை தீர்க்கும் வேலவர் கோயில், ஆர்.எஸ்.மடை சக்திவேல் முருகன் கோயில் ஆகிய இடங்களில் காலையிலும், ராமநாதபுரம் குண்டுக்கரை சுவாமிநாத சுவாமி கோயிலில் மாலையில் திருக்கல்யாணம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். அன்னதானம் வழங்கப்பட்டது.
கருமத்தம்பட்டி: கந்த சஷ்டி சூரசம்ஹார விழாவை ஒட்டி, கருமத்தம்பட்டி விராலிக்காடு ஸ்ரீ சென்னியாண்டவர், குமரன் கோட்டம் சுவாமிநாத சுவாமி, செங்கத்துறை ஸ்ரீ
சென்னியாண்டவர் கோயில்களில் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. உற்சவம் முடிந்து பக்தர்கள் விரதத்தை முடித்தனர்.
கிட்டாம்பாளையம் பழனி ஆண்டவர் கோயிலில் நடந்த திருக்கல்யாண உற்சவத்தில், உற்சவருக்கு அபிஷேக அலங்காரமும், சுப்ரமணிய ஹோமமும், திருக்கல்யாண உற்சவமும் நடந்தது.
* பெரியநாயக்கன்பாளையம் ஜோதிபுரத்தில் உள்ள ஜோதி பாலமுருகன் கோயிலில் முருகன், வள்ளி, தெய்வானை திருமண கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
* துடியலூர் வடமதுரை விருந்தீஸ்வரர் கோயிலில் சுப்பிரமணியர் சன்னிதியில், முருகர்,வள்ளி, தெய்வானை திருக்கல்யாணம் நடந்தது. முருகர் மூலஸ்தான மண்டபத்தில்,
மயில் வாகனத்தில் எழுந்தருளினார். உற்சவர் சுப்பிரமணிய சுவாமி வெள்ளை யானை வாகனத்தில் எழுந்தருளி, திருவீதி உலா வந்தார்.
* குமரன்குன்று கல்யாண சுப்பிரமணிய சுவாமி கோயிலில், வள்ளி, தெய்வானை, உடனமர் கல்யாண சுப்ரமணியசுவாமி திருக்கல்யாணம் நடந்தது.
குன்னத்தூராம்பாளையம், சக்தி மாரியம்மன் கோயில், சாலையூர், பழனி ஆண்டவர் கோயிலில், சிரவை ஆதினம், குமரகுருபர சுவாமிகள் அருளுரை வழங்கி திருக்கல்யாண உற்சவத்தை நடத்தினார். கோயில்பாளையம் கால காலேஸ்வரர் கோயிலில் முருகப்பெருமான் சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்தார்.
* மேட்டுப்பாளையம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில், திருக்கல்யாண வைபவம் காலை 10 மணிக்கு நடந்தது. சிவாச்சாரியர்கள் வேத மந்திரங்கள் முழங்க, வள்ளி, தெய்வானை சமேத முருகப்பெருமானுக்கு திருமாங்கல்யம் அணிவித்தனர். பக்தர்களுக்கு தாலி சரடு, பிரசாதம் வழங்கப்பட்டது.
மதுரை
சோழவந்தான்: சோழவந்தான் வட்டாரத்தில் உள்ள கோயில்களில் முருகன் திருக்கல்யாணம் கோலாகலமாக நடந்தது. திருவேடகம் ஏடகநாதர் கோயிலில் நடந்த விழாவில் மாப்பிள்ளை வீட்டாராக பரசுராம், பெண் வீட்டாராக சண்முகசுந்தரம், அர்ச்சகர் வர்ஷன் திருமண சடங்குகளை நடத்தினர். சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது. விழா கமிட்டியினர் பொன்கார்த்திக், சண்முகவள்ளி, மாதேஷ், அறங்காவலர் சேவுகன் கோயில் நிர்வாகத்தினர் ஏற்பாடுகளை செய்தனர்.
தென்கரை மூலநாதசாமி கோயிலில் நடந்த விழாவில் மாப்பிள்ளை வீட்டாராக கண்ணன், பரசுராம் பட்டர் தலைமையில் பெண் வீட்டாராக கணேசன்,விக்னேஷ் சிவம், அர்ச்சகர்கள் பிரசாத், செந்தில் ஆகியோர் சடங்குகளை நடத்தினர். சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு மஹாதீபாராதனை நடந்தது. கந்தசஷ்டி விழா கமிட்டியினர், கோயில் நிர்வாகத்தினர் ஏற்பாடுகளைச் செய்தனர்.
பொள்ளாச்சி
பொள்ளாச்சி சுப்ரமணிய சுவாமி கோவிலில், கந்த சஷ்டி திருவிழா கடந்த, 9ம் தேதி மாலை, 6:30 மணிக்கு, விநாயகர் பூஜை, வாஸ்துசாந்தி உள்ளிட்ட பூஜைகளுடன் துவங்கியது. கடந்த, 10ம் தேதி கந்த சஷ்டி உற்வசம் காப்பு கட்டு நிகழ்ச்சி நடந்தது. விழாவையொட்டி, தொடர்ந்து நான்கு கால அபிஷேக ஆராதனைகள் நடந்தது. கடந்த, 14ம் தேதி மாலை வேல்வாங்கும் உற்சவ நடந்தது. நேற்றுமுன்தினம் மாலை, சூரனை வதம் செய்யும் சூரசம்ஹாரம் நடந்தது. சூரசம்ஹாரம் முடிந்ததும், வாழைத்தண்டு, இஞ்சி, பச்சைமிளகாய், ஆப்பிள், ஆரஞ்சு, திராட்சை, சாத்துக்குடி, மாதுளை, கொய்யா, வெள்ளரிக்காய் போன்ற பழங்கள்; தயிர், கருவேப்பிலை,கொத்தமல்லி முதலியவை கொண்டு பிரசாதம் தயாரித்து, சுப்ரமணிய சுவாமிக்கு படைத்து விரதம் முடித்தனர். நேற்று காலை, 7:00 மணிக்கு மஹா அபிேஷகம் ஆராதனை நடந்தது. மாலை, 6:00 மணிக்கு வள்ளி, தெய்வானையுடன் சுப்ரமணியருக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது. வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா கோஷம் முழங்க, சுவாமி திருக்கல்யாணம் நடந்தது. அதன்பின், பக்தர்களுக்கு மஞ்சள் கயிறு, பிரசாதம் வழங்கப்பட்டது.
* பொள்ளாச்சி, குரும்பம்பாளையம் அம்மணீஸ்வரர் கோவில் கந்தசஷ்டி விழாவில், சூரசம்ஹாரத்துக்கு பின் பக்தர்கள் விரதத்தை நிறைவு செய்தனர். நேற்று காலை, திருக்கல்யாண உற்சவமும், சிறப்பு அலங்கார பூஜையும் நடந்தது. தொடர்ந்து, அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை, 4:00 மணிக்கு சுவாமி திருவீதி உலா நடந்தது.
* சூளேஸ்வரன்பட்டி கோகுலம் கார்டன் செந்துார் அழகன் கோவில், கந்த சஷ்டி விழாவில், நேற்று காலை திருக்கல்யாண உற்சவம், அன்னதானம், மாலை, 6:00 மணிக்கு தேர் திருவீதி உலா நடந்தது.
* ஜமீன் ஊத்துக்குளி, வள்ளி, தெய்வானை உடனமர் சுப்ரமணிய சுவாமி கோவிலில், கந்த சஷ்டி சூரசம்ஹார விழாவையொட்டி தினமும் காலை, 7:30 மணிக்கு அபிஷேக பூஜையும் இரவு, 7:00 மணிக்கு மேல் மஹா தீபாராதனை நடந்தது. நேற்று காலை, சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவமும், மாலையில் சுவாமி திருவீதி உலாவும் நடந்தது.
* கெட்டிமல்லன்புதுார் தண்டாயுதபாணி கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. நேற்று காலை, 9:00 மணிக்கு திருக்கல்யாணம், அபிஷேக பூஜைகள் நடைபெற்றன.
வால்பாறை
வால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவிலில், 14 ம் ஆண்டு கந்தசஷ்டி விழாவில், நேற்று காலை, 5:00 மணிக்கு கணபதி பூஜையும், 6:00 மணிக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜையும் நடைபெற்றது. காலை 11:00 மணிக்கு சுவாமிக்கு திருக்கல்யாணம் நடந்தது. இதில், வால்பாறை நகர் மற்றும் பல்வேறு எஸ்டேட் பகுதியில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலையில், வள்ளி, தெய்வாணை சமேத சுப்ரமணிய சுவாமி திருவீதி உலா சென்று அருள்பாலித்தார். விழா ஏற்பாடுகளை கந்தசஷ்டி விழா குழுவினர் செய்திருந்தனர்.
புதுச்சேரி
தட்டாஞ்சாவடி வள்ளி தேவசேனா சமேத சுப்ரமணிய சுவாமி கோவிலில் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. விழாவையொட்டி சுவாமிக்கு காலை சிறப்பு அபிஷேகம் ஆராதனைகளும், தீபாரதனை நடந்தது. இரவு வள்ளி தெய்வானை–சுப்பரமணிய சுவாமி திருக்கல்யாணம் வைபவம் நடந்தது. முன்னதாக மாலை மாற்றுதல் நிகழ்ச்சி நடந்தது. விழாவில் தட்டாஞ்சாவடி தொகுதி எம்.எல்.ஏ., அசோக் ஆனந்த் சாமி தரிசனம் செய்தார். பின் விழாவில் பங்கேற்ற பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினார். ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.முதலியார்பேட்டை தொகுதி நைனார்மண்டபம் மூகாம்பிகை நகர் 7 வது குறுக்கு வீதியில் சுப்பிரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில், கந்த சஷ்டி சூரசம்ஹாரம் விழாவையொட்டி, சுப்ரமணிய சுவாமி திருக்கல்யாண உற்சவம் நடந்தது.
மூணாறு
பழநி தண்டாயுதபாணி கோயிலில் நடக்கும் பூஜை உள்பட ஐதீகங்கள் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. நேற்று திருக்கல்யாண வைபவம் நடந்தது. கோயில் வளாகத்தில் உள்ள கார்த்திகை மஹாலில் பல வண்ண பூக்களால் அலங்கரிக்கப்பட்டு வள்ளி, தெய்வானையுடன் உற்சவர் முருகன் மணக்கோலத்தில் எளுந்தருளினார். பக்தர்களின் சீர்வரிசையுடன் மாப்பிள்ளை அழைப்பு நடந்தது. கோயில் அர்ச்சகர் சங்கரநாராயணசர்மா வள்ளி, தெய்வானைக்கு மாங்கல்யம் சார்த்தினார். நேற்று இரவு திருமண விருந்து நடந்தது. ஏற்பாடுகளை இந்து தேவஸ்தான குழு முக்கியஸ்தர்கள் செய்தனர்.
பெரியகுளம்
மலர் அலங்காரத்தில் பாலசுப்பிரமணியர், வள்ளி, தெய்வானையுடன் காட்சியளித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். பெரியகுளம் ஞானாம்பிகை காளஹஸ்தீஸ்வரர் கோயிலில் திருக்கல்யாணம் நடந்தது. சிவசுப்பிரமணியர் சமேத வள்ளி, தெய்வானையுடன் மலர் அலங்காரத்தில் காட்சியளித்தார். வடுகபட்டி வள்ளி தேவசேனா செந்தில் முருகன் கோயிலில் திருக்கல்யாணம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
ஆண்டிபட்டி: டி.சுப்புலாபுரம் கந்தநாதர் கோயிலில் கந்தசஷ்டி விழாவை தொடர்ந்து திருக்கல்யாண நிகழ்ச்சி நடந்தது. நேற்று முன் தினம் நடந்த சூரசம்ஹாரம் நிகழ்ச்சிக்கு பின் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனைகள் நடந்தது. பக்தர்களுக்கு பருப்பு நீர் கோயில் சார்பில் வழங்கப்பட்டது. நேற்று நடந்த சுவாமி திருக்கல்யாண நிகழ்ச்சியில் பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டனர். மாலையில் நடந்த சுவாமி ஊர்வலத்துக்கு பின் சிறப்பு பூஜைகள், விரதமிடுதல், அன்னதானம் நிகழ்ச்சி நடந்தது. விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.
தேனி
முருகன் கோயில்களில் கந்த சஷ்டி விழா நவ., 10ல் காப்பு கட்டுதலுடன் கோலாகமாக துவங்கியது. தேனியில் பெரியகுளம் ரோடு வேல்முருகன் கோயில், மதுரை ரோடு மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் முருகன், என்.ஆர்.டி., நகர் சிவகணேச கந்த பெருமாள் கோயில்களில் முருகன் தினமும் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தனர். நேற்று முன்தினம் காலை பால்குட ஊர்வலம், மாலையில் வேல் வாங்குதல், சூரசம்ஹாரம் நிகழ்ச்சி விமர்சையாக நடந்தது. நேற்று காலை திருக்கல்யாண உற்சவம் நடந்தது. சுவாமி வள்ளி, தெய்வானையுடன் பக்தர்களுக்கு காட்சியளித்தார். ஏராளமான பக்தர்கள் கல்யாண விழாவில் பங்கேற்று தரிசனம் செய்தனர். கோயில் நிர்வாகங்கள் சார்பில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
தேவாரம்: பராசக்தி மாரியம்மன் கோயிலில் உள்ள முருகன், வள்ளி, தெய்வானைக்கு திருக்கல்யாணம் நேற்று நடந்தது. மலர் அலங்காரத்தில் சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாரனைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் பெற்றனர். அன்னதானம் வழங்கப்பட்டன.
கூடலுார்: கூடல் சுந்தரவேலவர் திருக்கோயில் கந்த சஷ்டி விழாவில் நேற்று சுந்தரவேலவருக்கு வள்ளி தெய்வானையுடன் திருக்கல்யாண நிகழ்ச்சி நடந்தது. மெட்டி அணிவித்து மாலை மாற்றப்பட்டது. முன்னதாக சீர் கொண்டு வரப்பட்டது. சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
திருக்கல்யாணத்தை திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவில் ஸ்தலத்தார் சங்கரநாராயணன் சர்மா, சீனிவாசன் சர்மா, வீரபாகுமூர்த்தி சர்மா, ஸ்தல அர்ச்சகர் சந்திரசேகரன் நடத்தி வைத்தனர். உணவு வழங்கப்பட்டது. மாலையில் மயில் வாகனத்தில் சாமி எழுந்தருதல் நிகழ்ச்சியும், ஊஞ்சல் உற்சவம் நிகழ்ச்சியும் நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை ஒக்கலிகர் காப்பு மகாஜன சங்க தலைவர் ராம்பா, செயலாளர் அருண்குமார், பொருளாளர் சரவணன், நிர்வாகிகள் செய்திருந்தனர்.
திருப்பூர்
கந்தசஷ்டி விழாவின் நிறைவாக, அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில், திருமுருகநாதர் கோவில், அலகுமலை பாலதண்டாயுத முத்துக்குமாரசுவாமி கோவில், மலைக்கோவில் குழந்தைவேலாயுதசாமி, திருப்பூர் மற்றும் நல்லுார் விஸ்வேஸ்வர சுவாமி கோவில்களில் நேற்று, திருக்கல்யாண உற்சவ விழா, விமரிசையாக நடந்தது. ஸ்ரீவள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணியருக்கு, 16 வகையான திரவியங்களால் மகா அபி ஷேகம் நடந்தது. தொடர்ந்து, சிறப்பு அலங்காரத்துடன், மணக்கோலத்தில் எழுந்தருளினர்; சிவாச்சார்யார்கள் மூலமாக, திருக்கல்யாண உற்சவம் வேதமந்திரங்கள் முழங்க நடைபெற்றது. மணக்கோலத்தில், தேவியருடன் எழுந்தருளிய சுப்பிரமணியர், திருவீதியுலா சென்று, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து, பக்தர்களுக்கு கல்யாண விருந்து வழங்கப்பட்டது.
சிவன்மலை
சிவன்மலை சுப்பிரமணியர் கோவில், கொங்கணகிரி கந்தப்பெருமான் கோவில், வாலிபாளையம் கல்யாண சுப்பிரமணியர் கோவில், பூச்சக்காடு செல்வ விநாயகர் கோவில், அணைக்காடு செல்வ விநாயக்ர கோவில், பலவஞ்சிபாளையம் காளிக்குமாரசுவாமி கோவில், குளத்துப்பாளையம் கனககிரி வேலாயுதசுவாமி கோவில், அலகுமலை முத்துக்குமார பாலதண்டாயுதபாணி சுவாமி கோவில், மலைக்கோவில் குழந்தை வேலாயுத சுவாமி கோவில், விராலிக்காடு சென்னியாண்டவர் கோவில், கதித்தமலை வெற்றி வேலாயுதசாமி கோவில்களில், கந்தசஷ்டி விழா திருக்கல்யாண உற்சவ விழா வெகுவிமரிசயைாக நடந்தது. மஞ்சள் சரடு, மலர்வகை, குங்குமம், சந்தனம், மஞ்சள் உள்ளிட்ட பொருட்கள் பிரசாதமாக வழங்கப்பட்டன.
மாதப்பூர்
பல்லடம் அருகே மாதப்பூர் முத்துக்குமார சுவாமி கோவிலில், கந்தசஷ்டி விழா கொண்டாடப்பட்டது. நேற்று முன்தினம், மயில்வாகனத்தில் எழுந்தருளிய முத்துக்குமாரசுவாமி, சூரன்களை வதம் செய்தார். நேற்று காலை, ஆயிரக்கணக்கான பக்தர்கள் கண்டுகளிக்க, வள்ளி, தெய்வானை, முத்துக்குமாரசுவாமி திருக்கல்யாண வைபவம் நடந்தது. இதனையடுத்து, ஊஞ்சல் சேவையும், இதைத்தொடர்ந்து, பக்தர்களுக்கு கல்யாண விருந்தும் வழங்கப்பட்டது.
திருமுருகன்பூண்டி
கொங்கேழு சிவாலயங்களில் ஒன்றானத திருமுருகன்பூண்டி திருமுருக நாதர் சுவாமி கோவிலில் கந்த சஷ்டி திருவிழா, கடந்த 10ம் தேதி காப்புக்கட்டுதலுடன் துவங்கியது. தொடங்கியது. நேற்று முன்தினம் முருகப்பெருமான் 4 வீதிகளும் வலம் வந்து சூரனை வதம் செய்தார். நேற்று காலை சஷ்டி மண்டபத்தில், வள்ளி தெய்வானை உடன் சண்முகநாதர் மணக்கோலத்தில் எழுந்தருளினார். வேத மந்திரங்கள் முழங்க மங்கள வாத்தியத்துடன், திருக்கல்யாண வைபவம் கோலாகலமாக நடந்தது. தொடர்ந்து, பக்தர்களுக்கு திருமாங்கல்ய பிரசாதம் வழங்கப்பட்டது. அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
திண்டுக்கல்
நத்தம்: நத்தம் அருகே திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் திருக்கல்யாண உற்ஸவத்தையொட்டி வள்ளி, தெய்வானை, முருகன் சிறப்பு அலங்காரத்தில் கோயிலை சுற்றி வலம் வந்தனர். விநாயகர் சன்னதி முன் மாலை மாற்றும் நிகழ்ச்சி நடந்தது. கோயில் மண்டபத்தில் ஊஞ்சலில் அமர வைக்கப்பட்டு வள்ளி, தெய்வானை, முருகருக்கு திருக்கல்யாணம் நடத்தப்பட்டது. ஏராளமான பக்தர்கள் அரோகரா கோஷம் எழுப்பி தரிசனம் செய்தனர். மணக்கோலத்தில் சுவாமி காட்சி தந்தார். பக்தர்கள் திருமண சீர்வரிசை பொருட்களை காணிக்கையாக செலுத்தி வழிபட்டனர். சஷ்டி மண்டபத்தில் அன்னதானம் நடந்தது.
சின்னாளபட்டி: சின்னாளபட்டி சதுர்முக முருகன் கோயிலில் முன்னதாக கணபதி ஹோமம், வேதிகார்ச்சனை உள்ளிட்ட பூஜைகள் நடந்தது. வள்ளி, தெய்வானை சமேத
சிவசுப்பிரமணியருக்கு அபிஷேக, அலங்கார, தீபாராதனைகளுடன் புறப்பாடு நடந்தது. சிறப்பு யாகசாலை பூஜைகளுடன் திருக்கல்யாணம் நடந்தது. ஆன்மிக சொற்பொழிவு, பக்தர்களுக்கு அன்னதானம் நடந்தது.
வடமதுரை: வடமதுரை மீனாட்சியம்மன் கோயில் வளாக சுப்பிரமணிய சுவாமி, ரயில்வே ஸ்டேஷன் ரோடு பாலமுருகன், தென்னம்பட்டி சுப்பிரமணிய சுவாமி, தென்னம்பட்டி நந்தீஸ்வரர் கோயில் வளாக பாலமுருகன், ஜி.நடுப்பட்டி வெள்ளிமலை முருகன், திண்டுக்கல் அபிராமி அம்மன் கோயில், ரயிலடி சித்தி விநாயகர் கோயில் வளாக சுப்பிரமணிய சுவாமி, கந்தக்கோட்டம் சுப்பிரமணிய சுவாமி, ஒய்.எம்.ஆர்.,பட்டி சுப்பிரமணிய சுவாமி, என்.ஜி.ஓ., காலனி தண்டாயுதபாணி சுவாமி, மயில்முருகன் கோயில், கூட்டுறவு நகர் செல்வ விநாயகர் உட்பட மாவட்டத்தில் உள்ள முருகன் கோயில்களில் நடந்த திருக்கல்யாண உற்ஸவத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
செங்கல்பட்டு
மறைமலை நகர்: செங்கல்பட்டு புறநகர் பகுதிகளில் கந்தசஷ்டி விரதத்தை முன்னிட்டு, பல்வேறு முருகன் கோவில்களில் திருக்கல்யாண உத்சவம் நேற்று விமரிசையாக நடந்தது. மறைமலை நகரில் உள்ள செல்வ முத்துக்குமார சுவாமி கோவில், செங்கல்பட்டு செம்மலை வேல்முருகன் கோவில், வள்ளி – தெய்வானை சமேத கல்யாண சுப்ரமணியர், பொன்விளைந்த களத்துார் கிராமத்தில் உள்ள வள்ளிமலை வேலாயுதசாமி கோவில் உள்ளிட்ட கோவில்களில் திருக்கல்யாண உத்சவம் விமரிசையாக நேற்று நடந்தது.
பாண்டூர்: செங்கல்பட்டு மாவட்டம், பெருமாட்டுநல்லுார் ஊராட்சி, பாண்டூர் கிராமத்தில், பனை மரத்தை தலவிருட்சமாக கொண்ட வேண்டவராசி அம்மன் கோவில் உள்ளது. வேண்டவராசி அம்மனுக்கு மூன்று கோடி ரூபாய் மதிப்பீட்டில், பிரமாண்ட கோவில் கட்டப்பட்டு, கடந்தாண்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இக்கோவிலில், ஹிந்து மதத்தின் சைவம் – வைணவத்தை உள்ளடக்கி, விநாயகர், முருகர், பெருமாள், அனுமன் உட்பட பல தெய்வங்களுக்கும் தனியாக கருவறை அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கோவில் பிரகாரத்தில் எழுந்தருளியுள்ள சுப்பிரமணிய சுவாமிக்கு, வள்ளி – தெய்வானையுடன், திருக்கல்யாண வைபோகம் நேற்று விமரிசையாக நடந்தது.
பக்தர்கள் அனைவருக்கும் கல்யாண விருந்து பரிமாறப்பட்டு, தாம்பூழ பை வழங்கப்பட்டது.
திருப்புத்தூர்
சிவகங்கை தேவஸ்தானத்திற்கு உட்பட்ட சிவகங்கை காசி விஸ்வநாதர் கோயிலில் உள்ள சுப்பிரமணியர் சன்னதியில், கந்த சஷ்டியை முன்னிட்டு வள்ளி, தெய்வானை முருகனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின்னர் பக்தர்கள் முன்னிலையில் திருக்கல்யாணம் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
திருப்புத்துார் திருத்தளி நாதர் கோயிலில் கந்த சஷ்டியை முன்னிட்டு வள்ளி, தெய்வானைக்கு திருக்கல்யாணம் நடந்தது. நவ., 10 ல் துவங்கிய கந்த சஷ்டி விழாவின் நிறைவு நாளான நேற்று சிறப்பு பூஜைகள் நடந்தது. மண்டபத்தில் வள்ளி, தெய்வானையுடன் சுப்பிரமணியர் எழுந்தருளினார்.
நேற்று காலை 10:11 மணிக்கு திருக்கல்யாணம் நடந்தது. ராஜகாளியம்மன் கோயிலில் உள்ள முருகன் கோயிலில் சிறப்பு அபிஷேகமும், ராஜஅலங்காரத்தில் முருகன் எழுந்தருளினார். பின்னர் சிவாச்சாரியார்கள் வேதமந்திரம் முழங்க வள்ளி, தெய்வானை, முருகன் திருக்கல்யாணம் நடந்தது.
திருக்கோவிலூர்
கீழையூர், வீரட்டானேஸ்வரர் கோவிலில் கந்த சஷ்டி விழாவின் நிறைவாக, நேற்று முன்தினம் காலை விக்னேஷ்வர பூஜை, யாகசாலை பூஜை, பூர்ணாகுதி, கடம் புறப்பாடாகி மூலவர் வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணியர்க்கு மகா அபிஷேகம், அலங்காரம் நடந்தது. மதியம் சிவானந்தவள்ளி சன்னதியில், சூரசம்கார நிகழ்ச்சிக்காக அம்பாளிடம் இருந்து சக்திவேல் பெறப்பட்டு சுப்பிரமணியரிடம் சமர்ப்பிக்கப்பட்டு, மாலையில் உற்சவர் வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணியர் சூரபத்மனை வதம் செய்யும் வைபவம் நடந்தது. தொடர்ந்து, நேற்று மாலை வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணியர்க்கு திருக்கல்யாண வைபவம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
சங்கராபுரம்
சங்கராபுரம் அடுத்த தேவபாண்டலத்தில், கந்த சஷ்டியை முன்னிட்டு, முருகனுக்கு திருக்கல்யாண வைபவம் நடந்தது.தேவபாண்டலம் பாண்டுவனேஸ்வரர் கோவில் வளாகத்தில், நேற்று முருகப் பெருமானுக்கு திருக்கல்யாண வைபவம் நடந்தது. முன்னதாக புண்யாகவாசனம், விக்னேஸ்வர பூஜை நடந்தது. பின், வள்ளி தேவசேனா சமேத முருகப் பெருமானுக்கு திருக்கல்யாண வைபவம் நடந்தது. இதில், திரளான மக்கள் பங்கேற்றனர். விசுவநாத குருக்கள் முன்னிலையில் திருக்கல்யாண வைபவம் நடந்தது.
கடலுார்
புதுவண்டிப்பாளையம் சிவசுப்ரமணிய சுவாமி கோவிலில் கந்த சஷ்டி விழா கடந்த 10ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. கடந்த 14ம் தேதி வீரபாகு சிறை மீட்டல், தாரகன்வதம், சக்திவேல் பெறும் விழா நடந்தது. நேற்று முன்தினம் வீரபாகு தேவருக்கு சிறப்பு அபிேஷகம், சஷ்டி மகாபிேஷகம், வீரபாகு துாது சிங்கமுகன் வதம், சூரசம்ஹாரம் நடந்தது. நேற்று வள்ளி தேவசேனா சமேத சிவசுப்ரமணிய சுவாமிக்கு திருக்கல்யாணம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இரவு கொடியிறக்கம் நடந்தது.
விருத்தாசலம்
விருத்தாசலம் விருத்தாம்பிகை உடனுறை விருத்தகிரீஸ்வரர் கோவிலில் ஆண்டுதோறும் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடப்பது வழக்கம். இதையொட்டி, நேற்று முன்தினம் கோவில் வளாகத்தில் உள்ள வள்ளி தெய்வானை உடனுறை சுப்பிரமணியருக்கு பால், தயிர், இளநீர், பன்னீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட திரவிய பொருட்களால் சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. அதைத்தொடர்ந்து, மாலை 6:00 மணிக்கு சக்திவேல் வாங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் உற்சவர் சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. பின்னர், சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த சுப்பிரமணிய சுவாமி, விருத்தகிரீஸ்வரரை வலம் வந்து, விருத்தாம்பிகை அம்மன் சன்னதியில் சக்திவேலை வாங்கி, கோவில் முன் நடந்த சூரசம்ஹார நிகழ்ச்சியில், சூரனை வதம் செய்யும் ஐதீக நிகழ்ச்சி நடந்தது. அதனைத் தொடர்ந்து நேற்று இரவு 8:00 மணிக்கு வள்ளி தெய்வானை உடனுறை சுப்ரமணியர் சுவாமி திருக்கல்யாண நிகழ்ச்சி நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
ரயில்வே காலனியில் உள்ள சித்தி விநாயகர் கோவிலில், வள்ளி தெய்வானை முருகன் சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது.
நடுவீரப்பட்டு: நடுவீரப்பட்டு காமாட்சியம்மன் சமேத கைலாசநாதர் கோவிலில் நேற்று கந்தசஷ்டியை முன்னிட்டு சுப்பரமணியர், தெய்வாணை திருக்கல்யாணம் நடந்தது.
நேற்று முன்தினம் கந்தசஷ்டி விழா நடந்தது. அதனை தொடர்ந்து நேற்று சுப்ரமணியர், தெய்வாணை திருக்கல்யாணம் நடந்தது. விழாவை முன்னிட்டு காலை சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. இரவு 7:00 மணிக்கு திருக்கல்யாணம் நடந்தது. தொடர்ந்து இரவு சுவாமி வீதியுலா நடந்தது. திருக்கல்யாணத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமியை வழிபட்டனர்.
நீலகிரி
மஞ்சூர் அருகே அன்னமலை முருகன் கோவிலில், முருகன் - வள்ளி , தெய்வானை திருக்கல்யாண உற்சவம், கோவில் ஸ்தாபகர் குரு கிருஷ்ண நந்தாஜி தலைமையில், இளைய மடாதிபதி வடிவேல் சுவாமி முன்னிலையில், நேற்று காலை, 7:00 மணிக்கு கணபதி பூஜையுடன் துவங்கியது. தொடர்ந்து நடந்த ஊர்வலத்தில், முருகப்பெருமான் சிறப்பு அலங்காரத்தில் புடைசூழ பவனி வந்தார். பின் , வள்ளி தெய்வானையுடன் திருமணம் நடக்கும் நிகழ்ச்சி நடந்தது. பக்தர்களுக்கு திருக்கல்யாணம் விருந்து நடந்தது.
அதேபோல், ஊட்டி லோயர் பஜார் பகுதியில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோவிலில், முருகப்பெருமான் வள்ளி மற்றும் தெய்வானையுடன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். திருக்கல்யாண வைபவத்தை காண பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமியை வழிபட்டனர். விழாவில் பங்கேற்ற அனைத்து பக்தர்களுக்கு திருக்கல்யாண மங்கல பிரசாதமும் , அன்னதான நிகழ்ச்சி நடந்தது. மேலும், குன்னுார் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடந்த திருக்கல்யாண உற்சவத்தில் மகளிர் சார்பில் சீர் தட்டு ஊர்வலம் நடந்தது. இதேபோல, மாவட்ட முழுவதும் உள்ள முருகன் கோவில்களில் திருக்கல்யாண வைபவம் கோலாலகமாக நடந்தது.
உடுமலை
உடுமலை பகுதியிலுள்ள முருகன் கோவில்களில், கந்த சஷ்டி சூரசம்ஹார விழா, கடந்த, 10ம் தேதி துவங்கியது, பக்தர்கள் காப்பு கட்டி, இறைவனை வேண்டி விரதம் துவக்கினர். ஆறு நாட்களுக்கும், முருகப்பெருமானுக்கு, பல்வேறு திரவியங்களில், சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜைகள் நடந்தன. நேற்று முன்தினம் மாலை, முக்கிய நிகழ்ச்சியான, சூரசம்ஹாரம் நடந்தது, அம்மையான சக்தியிடம் வேல் வாங்கி, தாருகன், பானுகோபன், சிங்க முகன், சூரன் என பல்வேறு வடிவங்கள் எடுத்து வந்த, சூரனை நான்கு வீதிகளில் வலம் வந்து, வதம் செய்தார். போரில் வெற்றியுடன், வேல், சேவல் கொடி ஏந்தி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். வெற்றி மாலை அணிந்த முருகப்பெருமானுக்கு, இரவு சிறப்பு பூஜைகள் நடந்தன. நேற்று, கந்த சஷ்டி விழாவில் முக்கிய நிகழ்ச்சியான, வள்ளி தெய்வானை சமேத சுப்ரமணியருக்கு, திருக்கல்யாண உற்சவம் நடந்தது.
மடத்துக்குளம் பாப்பான்குளம் ஞான தண்டபாணி சுவாமி கோவிலில், நேற்று அதிகாலை, 5:00 மணிக்கு, மங்கள இசையுடன், பக்தர்கள் திருக்கல்யாண சீர்வரிசை ஊர்வலம், வேத பாராயணம், விவாக பூஜைகள், திருமாங்கல்ய தாரணம், மகா தீபாராதனை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன. சுவாமி திருக்கல்யாண உற்சவத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
* வெஞ்சமடை மங்களாம்பிகை உடனமர் வாஞ்சிநாத சுவாமி கோவிலில் எழுந்தருளியுள்ள, வள்ளி தெய்வானை சுப்ரமணியர் சுவாமி கோவிலில், கந்த சஷ்டி விழாவில் நேற்று திருக்கல்யாண உற்சவம் நடந்தது. பக்தர்கள் சீர்வரிசை தட்டுக்கள் கொண்டு வர, யாக சாலை பூஜைகளுடன், முருகப்பெருமானுக்கும் திருக்கல்யாணம் கோலாகலமாக நடந்தது.
* பிரசன்ன விநாயகர் கோவிலில், கந்த சஷ்டி விழாவின் ஏழாம் நாளான நேற்று, காலை, 10:30 மணிக்கு, வள்ளி தெய்வானை உடனமர் சுப்ரமணிய சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவம் கோலாகலமாக நடந்தது. மாலை, 7:00 மணிக்கு, வெள்ளி ரதத்தில் சுவாமி திருவீதி உலா நடந்தது.
அதே போல், போடிபட்டி முருகன் கோவில், ராயல் லட்சுமி நகர், ராஜவிநாயகர் கோவிலில் எழுந்தருளியுள்ள முருகன் கோவில், பழனியாண்டவர் நகர் சுப்ரமணிய சுவாமி கோவில், சோமவாரபட்டி, பாலமுருகன் கோவில் உள்ளிட்ட முருகன் கோவில்களில், முருகப்பெருமான் திருக்கல்யாண உற்சவம் கோலாகலமாக நடந்துது. தொடர்ந்து, திருக்கல்யாண விருந்து அருந்தி, பக்தர்கள் விரதத்தை நிறைவு செய்தனர்.