விழுப்புரம் அருகே பல்லவர் கால கொற்றவை சிற்பம் கண்டெடுப்பு
விழுப்புரம்: விழுப்புரம் அருகே 1200 ஆண்டுகள் பழமையான கொற்றவை சிற்பம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம் அடுத்த பானாம்பட்டு ஏரிக்கரையில் தொல்லியல் ஆய்வாளர் இம்மானுவேல், விழுப்புரம் அரசு கலைக்கல்லுாரி வரலாற்றுத்துறை முனைவர் பட்ட ஆய்வாளர்
ராகுல், முதுகலை இரண்டாமாண்டு மாணவர்கள் செந்தமிழ் செல்வன், செந்தமிழ்மாறன் ஆகியோர் கள ஆய்வில் ஈடுபட்டனர்.
அப்பாது, அங்குள்ள ஒரு வேப்பம் மரத்தடியில் மண்ணில் பாதி புதையுண்ட நிலையில் இருந்த பல்லவர் கால கொற்றவை சிற்பம் கண்டெடுக்கப்பட்டது. இதை குறித்து தொல்லியல் ஆய்வாளர் இம்மானுவேல் கூறியதாவது;
இந்த கொற்றவை, பலகை கல்லில் புடைப்பு சிற்பமாக செதுக்கப்பட்டுள்ளது. மண்ணிற்கு மேற்பகுதியில் இரண்டரை அடி உயரம் காணப்படும் சிற்பமானது அழகிய முகத்துடன் எட்டு கரங்களுடன் உள்ளது.
தலையில் கரண்ட மகுடம், இரு காதுகளிலும் பத்ரகுண்டலம், மார்பில் மார்புகச்சை, இடையில் அரையாடை, புஜங்களில் வாகுவளையங்கள், மணிக்கட்டில் வளையல்கள், கொற்றவையின் எட்டு கரங்களில் வலது பக்க நான்கு கரங்களில் சங்கு, நீண்ட வாள், அம்பு, பாசக் கயிறு மற்றும் இடது பக்கம் நான்கு கரங்களில் சக்கரம், வில், கேடயம் மற்றும் கீழ்கரம் இடுப்பின் மேல் வைத்தவாறு கடியஸ்த நிலையில் உள்ளது. இச்சிற்பம் 1200 ஆண்டுகள் பழமையானது.
இவ்வாறு அவர் கூறினார்.