பிள்ளையார்பட்டி கோயிலில் கூடுதல் நேரம் நடைதிறப்பு: முருகன், ஐயப்ப பக்தர்கள் தரிசிக்க
திருப்புத்தூர்: கார்த்திகை மாத துவக்கத்தை முன்னிட்டு சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் கோயிலில் ஐய்யப்ப, முருக பக்தர்கள் தரிசிக்க ஏதுவாக கூடுதல் நேரம் நடை திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிள்ளையார்பட்டியில் குடவரையில் மூலவர் விநாயகர் யோகநிலையில் எழுந்தருளியுள்ளார். கார்த்திகை துவங்கியதும் பழநி, சபரிமலைக்கு மாலை அணிந்து பக்தர்கள் சென்று வருவார்கள். ஆன்மிக பயணத்தின் போது மாநில அளவில் இருந்து வரும் பக்தர்கள் பிள்ளையார்பட்டி விநாயகர் கோயிலுக்கும் வருவது வழக்கம். அவர்கள் தரிசிக்க ஏதுவாக கூடுதல் நேரம் நடை திறக்கப்பட உள்ளது.
இதுகுறித்து டிரஸ்டிகள் கோனாபட்டு அரு.ராமசாமி, அரிமளம் நா.கண்ணன் கூறியதாவது: வழக்கமாக கோயில் நடை மதியம் 12:30 முதல் மாலை 4:00 மணி வரை சாத்தப்பட்டு இருக்கும். அதற்கு பின் திறந்து இரவு 8:30 மணி வரை தரிசனம் செய்யலாம். ஐயப்பன், முருக பக்தர்களின் வசதிக்காக கார்த்திகை முழுவதும் காலை 6:00 மணி முதல் இரவு 8:30 மணி வரை தொடர்ந்து பக்தர்களின் தரிசனத்திற்காக திறந்திருக்கும். வழக்கம் போல் நித்தியபடி பூஜைகள் நடைபெறும் என்றனர்.