திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சுவாமி, தெய்வானை அம்மன் மாலை மாற்றும் நிகழ்ச்சி
திருச்செந்தூர்: முருப்பெருமானின் 2-ம் படை வீடான திருச்செந்தூரில் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கடந்த 10 தேதி கந்தசஷ்டி திருவிழா தொடங்கியது. 7-ம் திருநாளான நேற்று இரவு சுவாமி குமரவிடங்க பெருமான், தெய்வானை அம்பாள் தொல் மாலை மாற்றும் நிகழ்ச்சி நடந்தது. இதனை ஒட்டி அதிகாலை 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து விசுவரூப தீபாராதனையும், உதய மார்த்தாண்ட அபிஷேகமும் நடந்தது. தொடர்ந்து தெற்கு ரத வீதி, மேல ரதவீதி சந்திப்புக்கு சுவாமி குமரவிடங்க பெருமானும், தெய்வானை அம்பாளும் வந்தனர். அங்கு தெற்கு ரதவீதியில் நின்ற சுவாமி குமரவிடங்க பெருமானை, தெய்வானை அம்பாள் மூன்று முறை சுற்றி வந்தார். பின்னர் சுவாமி, அம்பாள் மாலை மாற்று நிகழ்ச்சி நடந்தது. விழாவில் சுவாமி குமரவிடங்க பெருமானுக்கும், தெய்வானை அம்பாளுக்கு பட்டாடைகள் மற்றும் மாலைகள் மாற்றப்பட்டது. தொடர்ந்து சுவாமிக்கு தீபாராதனையான பின்னர், அம்பாளுக்கும் தீபாராதனை நடந்தது.