திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம்: ஹிந்துக்களின் மனதில் தீப ஒளி காமாட்சிபுரி ஆதினம் கருத்து!
பல்லடம்: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றும் போது, ஒவ்வொரு ஹிந்துக்களின் மனதிலும் தீப ஒளி தோன்றும் என, காமாட்சிபுரி ஆதினம் பஞ்சலிங்கேஸ்வரர் கருத்து தெரிவித்துள்ளார்.
அவர் கூறியதாவது: ஐந்து முகம் தோன்றின் ஆறுமுகம் தோன்றும்; வெஞ்சமலரில் அஞ்சேல் என வேல் தோன்றும் என்ற முருகப்பெருமானின் பக்தி பாடல் வரிகளுக்கு ஏற்ப, யாரெல்லாம் சரவணபவ என்ற மந்திரத்தை கூறுகின்றார்களோ, அவர்களிடம் அச்சம் நீங்கி ஆறுமுகம் தோன்றும். கடந்த ஓராண்டு காலமாக, ஹிந்துக்கள் அனைவரின் நெஞ்சிலும் தீபம் என்ற தீ எரிந்து கொண்டிருந்தது. இந்த தீ எப்போது திருப்பரங்குன்றம் தீபத்தூணில் எரியும் என்ற எண்ணம் அனைவரின் மனதிலும் இருந்தது. தீபம் ஏற்றும் போது எவ்வாறு பிரகாசம் ஏற்படுகிறதோ, அதுபோன்ற ஒரு தீப ஒளி திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றும் போது பக்தர்கள் மனதில் உருவாகும். உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு, அனைத்து ஹிந்துக்களின் மனதில் மகிழ்ச்சியையும், நம்பிக்கையையும் ஏற்படுத்தி உள்ளது. கடந்த காலத்தில் பின்பற்றி வந்த நடைமுறைகளை போன்று, உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை ஆண்டுதோறும் நடைமுறைப்படுத்த தமிழக அரசு உறுதுணையாக இருக்க வேண்டும்.