ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்கு திருப்பதி தேவஸ்தானம் சார்பில் வஸ்திர மரியாதை
திருச்சி : கைசிக ஏகாதசியை முன்னிட்டு ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்கு திருப்பதி தேவஸ்தானம் சார்பில் பட்டுவஸ்திர மரியாதை வழங்கப்பட்டது.
கி.பி 1320 முதல் 1370 வரையிலான ஆண்டுகளில் முஸ்லிம் படையெடுப்பின்போது ஸ்ரீரங்கம் அரங்கநாதர்சுவாமி கோவில் சூறையாடப்பட்ட நிலையில், நம்பெருமாள் திருப்பதி திருமலையில் சுமார் 50ஆண்டு காலம் எழுந்தருளியிருந்தார். இதனை நினைவுகூறும் வகையில் 108 வைணவ ஸ்தலங்களில் முதன்மையானதாதும், பூலோகவைகுண்டம் என்றழைக்கப்படும் ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி கோவிலுக்கு, ஆந்திரமாநிலம் திருமலை திருப்பதி தேவஸ்தானத்திலிருந்து ஆண்டுதோறும் கைசிக ஏகாதசியன்று ஸ்ரீரங்கம் நம்பெருமாளுக்கு வஸ்திர மரியாதை செய்யும் வைபவம் நடத்தப்பட்டுவருவது வழக்கம். அதன்படி கைசிக ஏகாதசி நாளான இன்று திருமலை திருப்பதி தேவஸ்தானத்திலிருந்து ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமிக்கும், உற்சவர் நம்பெருமாளுக்கு பட்டுவஸ்திரங்கள் மற்றும் அரங்கநாயகி தாயாருக்கு பட்டுபுடவைகள் மாலை மற்றும் மங்களப் பொருட்கள் கொண்டுவந்திருந்தனர். திருப்பதியிலிருந்து 365 நாட்களுக்குமான பட்டுவஸ்திரங்கள் மற்றும் மங்களப் பொருட்களை கோவில் யானை மீது வைத்து வழங்கப்பட்டுள்ளன; நம்பெருமாள் திருமலையில் 50 ஆண்டுகள் தங்கியிருந்ததை நினைவுகூரும் வகையில் ஆண்டுதோறும் வஸ்திர மரியாதை நடைபெறுவது குறிப்பிடத்தக்கது