கோட்டூரில் தருமபுரம் ஆதீன 8வது குருமகா சன்னிதானம் குருமூர்த்தம் கும்பாபிஷேகம்
மயிலாடுதுறை: கோட்டூரில் தருமபுரம் ஆதீன 8வது குருமகா சன்னிதானம் குருமூர்த்தம் கும்பாபிஷேகம் தருமபுரம் ஆதீனம் முன்னிலையில் நடந்தது
மயிலாடுதுறை தருமபுரத்தில் 16 ஆம் நூற்றாண்டில் குரு ஞானசம்பந்தரால் தோற்றுவிக்கப்பட்ட சைவ ஆதீன திருமடம் அமைந்துள்ளது. சைவத்தையும் தமிழையும் தழைத்தோக செய்து வரும் தருமபுரம் ஆதீனத்தின் 8 வது குருமகா சன்னிதானமாக ஸ்ரீலஸ்ரீ அழகிய சிற்றம்பல தேசிகர் சுவாமிகள் கி.பி. 1680 முதல் 1700 வரை 20 ஆண்டுகள் அருளாட்சி செய்து வந்தார். திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள கோட்டூர் கிராமத்தில் அவதரித்து இறுதியாக அங்கேயே சமாதி அடைந்த 8 வது குருமகா சன்னிதானம் அம்பர் மாகாளம் சொர்க்கபுர ஆதீனத்தை தோற்றுவித்த முதற்குறவருக்கு ஞானாசிரியராக திகழ்ந்தார். அவருக்கு கோட்டூர் சிவ கொழுந்தீஸ்வரர் கோவில் நந்தவனத்தில் தருமபுரம் ஆதீனம் 27 வது குருமகா சன்னிதானம் அருளானையின் படி குருமூர்த்த ஆலயம் அமைக்கப்பட்டு இன்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த 18ம் தேதி முதல் காலையாக சாலை பூஜைகள் தொடங்கி இன்று காலை நான்காம் கால யாக சாலை பூஜைகள் நிறைவடைந்தது. தொடர்ந்து பூர்ணாஹூதி, தீபாவாராதனை நடைபெற்றது. தொடர்ந்து யாக சாலையில் இருந்து கடங்கள் புறப்பாடு செய்யப்பட்டு குருமூர்த்த ஆலயத்தின் விமானத்தை அடைந்தன. மங்கள வாத்தியங்கள் இசைக்கு, வேத மந்திரங்கள் முழங்க தருமபுரம் ஆதீனம் 27 வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் முன்னிலையில் சிவாச்சாரியார்கள் குருமூர்த்த ஆலய விமான கலசத்தில் புனிதநீர் சேர்த்து கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர். பின்னர் குருமூத்ததில் பிரதிஷ்டை செய்யப்பட்ட சிவலிங்கத்திற்கு குருமகா சன்னிதானம் சிறப்பு அபிஷேக ஆராதனைகளை செய்து வைத்தார். இதில் தொண்டை மண்டல ஆதீனம், திருப்பனந்தாள் காசி மடத்து அதிபர் ஸ்ரீமத் சபாபதி தம்பிரான், தருமபுரம் ஆதீனம் தம்பிரான் சுவாமிகள், திருவாரூர் அருள்குமரன் உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். தொடர்ந்து மாதேஸ்வர பூஜை நடைபெற்று பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.