திருப்பரங்குன்றம் தீபத்தூணில் கார்த்திகை தீபம்: பக்தர்கள் கொண்டாட்டம்
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் நவ. 24 அன்று கார்த்திகை மகா தீபம் ஏற்ற உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. தீர்ப்பு வெளியானதும் சுப்பிரமணிய கோயில் முன்பு முருக பக்தர்கள், ஹிந்து அமைப்பினர், திருப்பரங்குன்றம் பூர்வ குடி மக்கள் கூடி அரோகரா கோஷம் எழுப்பினர். ஹிந்து மக்கள் கட்சி மாவட்ட தலைவர் சோலை கண்ணன், பா.ஜ. நிர்வாகிகள் வெற்றிவேல் முருகன், ராக்கப்பன், வேல்முருகன், சரவணகுமார், பூரண மாயன், இளையராஜா, ஹிந்து முன்னணி அரசு பாண்டி, சேவகன், பிரசாந்த், சசி, அகில பாரத அனுமன் சேனா மாநில அமைப்பு பொதுச்செயலாளர் ராமலிங்கம் மற்றும் திருப்பரங்குன்றம் பொதுமக்கள், பூர்வ குடியினர் கோயில் முன்பு அரோகரா கோஷம் போட்டு சஷ்டி கவசம் பாடினர். பின்பு 108 தேங்காய்கள் உடைத்தனர். வீடாக இனிப்புகள் வழங்கிய மகிழ்ச்சியை கொண்டாடினர்.
தீப தூணில் கார்த்திகை தீபம் காண காத்திருக்கிறோம் பக்தர்கள் கண்ணீர் மல்க உருக்கம்: பிரபு, திருப்பரங்குன்றம்:
திருப்பரங்குன்றம் மக்களின் நெடுநாளைய எதிர்பார்ப்பு, கோரிக்கையை உச்ச நீதிமன்றம் நிறைவேற்றியுள்ளனர். எங்களுக்கு எல்லை இல்லாத மகிழ்ச்சி சொல்ல முடியாத ஆனந்தம். இந்த தீர்ப்பு திருப்பரங்குன்றம் மக்கள் முருக பக்தர்கள், ஹிந்து அமைப்பினர் மட்டுமல்லாது சுப்பிரமணிய சுவாமிக்கும் கிடைத்த மாபெரும் வெற்றியாகும். எங்கள் மூதாதையர்கள் தீபத்தூணில் தீபம் ஏற்றியதை பார்த்துள்ளதாக கூறியுள்ளனர். தற்போது நாங்களும் அந்த பாக்கியத்தை பெற்றுள்ளது எங்களுக்கு வாழ்நாள் பாக்கியம்.
சரண்யா, தஞ்சை: தீர்ப்பை கேட்டு நெகிழ்ந்து போய் உள்ளோம். மகிழ்ச்சியை எப்படி கூறுவது என்று தெரியவில்லை. நெகிழ்ச்சியான தருணம். சிறு வயது முதல் இதை எதிர்பார்த்தோம். தற்போது நிறைவேறி உள்ளது. கடந்த ஆண்டு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதால் தீப தூணில் தீபம் ஏற்றப்படும் என திருப்பரங்குன்றம் வந்தோம். ஆனால் ஏயற்றப்படவில்லை. இந்த ஆண்டும் ஏற்றப்படுமா என்ற ஆசை எங்களுக்குள் இருந்தது. நவ.24 அன்று திருப்பரங்குன்றம் வந்தால் தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றப்படாவிட்டால் கடந்த ஆண்டு போலவே இந்த ஆண்டும் மனம் மிகவும் வேதனை அடையும் என்பதால் இன்று கோயிலில் தரிசனம் செய்ய வந்தோம். . இப்போது தீர்ப்பு கிடைத்துள்ளதால் தீபத்தை காண வருவோம்.
தீபத்தை காண்பது எங்களது பூர்வ ஜென்ம புண்ணியம். சோலை கண்ணன், ஹிந்து மக்கள் கட்சி மாவட்ட தலைவர்: உச்ச நீதிமன்ற தீபத்தூணில் தீபத்திருநாள் அன்று கார்த்திகை மகா தீபம் ஏற்றலாம் என உத்தரப்பட்டுள்ளது. ஹிந்து மக்கள் கட்சி உள்பட அனைத்து ஹிந்து அமைப்பினர், முருக பக்தர்கள், திருப்பரங்குன்றம் பூர்வ குடியினர் என அனைவரும் ஏகமனதாக மகிழ்ச்சியுடன் வரவேற்கிறோம். கடந்த ஆண்டு தீபத்தூணில் தீபம் ஏற்றும் விவகாரத்தில் மதுரை உயர் நீதிமன்றம் தீபம் ஏற்ற உத்தரவிட்டும், தி.மு.க., ஆட்சியில் நீதிமன்ற தீர்ப்பை மதிக்காமல் தீபம் ஏற்ற விடாமல் திருப்பரங்குன்றத்தை கலவர பூமியாக மாற்றி தடுத்து நிறுத்தினர். த.வெ.க., அரசும் உயர் நீதிமன்ற தீர்ப்பை ரத்து செய்யக்கோரி இடைக்கால தடை கேட்டு உச்சநீதிமன்றம் சென்றனர். ஆனால் உச்ச நீதிமன்றம் ஹிந்துக்களின் மனம் குளிரும் வகையில் உத்தரவை அளித்துள்ளார்கள். இது வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு. கடந்த ஆண்டு உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தும் தி.மு.க., ஆட்சி தடை விதித்தது போல் அல்லாமல், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மதித்து த.வெ.க., அரசு தீபத்தூணில் கார்த்திகை மகா தீபம் ஏற்ற வேண்டும். நவ. 24ல் தீபத்தூணில் கார்த்திகை மகா தீபம் ஏற்றுவதை காண தமிழக முதல்வர் விஜய் திருப்பரங்குன்றம் வரவேண்டும். தி.மு.க., அரசு செய்த தவறைப்போல், உச்சநீதிமன்ற உத்தரவை மீறி ஏதேனும் தடங்கல் செய்ய நினைத்தால் தமிழக அரசு மிகப் பெரிய பின் விளைவுகளை சந்திக்க நேரிடும். தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டுமென கடந்த 50 ஆண்டுகளாக பல்வேறு போராட்டங்கள் நடத்தியுள்ளோம். இதற்காக பலர் உயர் தியாகம் செய்துள்ளனர். ஜனநாயக ரீதியாகவும், சட்ட ரீதியாகவும் 100 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த ஆண்டு தீப தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவதை மிகுந்த மகிழ்ச்சியுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றோம்.