சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்தது: தினசரி ஆப்சென்டால் தேவசம்போர்டு கவலை
சபரிமலை: சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் நேற்று அதிகரித்தது. எனினும் ஆன்லைன் முன்பதிவு செய்தவர்களில் தினமும் 10 முதல் 15,000 பேர் வராதது தேவசம்போர்டுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது.
சபரிமலையில் மண்டல கால பூஜை கடந்த 17- ம் தேதி அதிகாலை தொடங்கி நடைபெற்று வருகிறது. தினமும் ஆன்லைன் முன்பதிவு மூலம் 66 ஆயிரம் பேருக்கும், ஸ்பாட் புக்கிங் மூலம் 14 ஆயிரம் பேருக்கும் என மொத்தம் 80,000 பேருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நேற்று ஐந்தாவது நாள் ஆன நிலையில் பக்தர்கள் கூட்டம் சற்று அதிகமாக காணப்பட்டது. சீசன் ஆரம்பத்தில் ஒரு மணி நேரத்துக்கு ஆயிரத்துக்கும் குறைவான பக்தர்கள் மலையேறி வந்த நிலையில் நேற்று இது 3555 ஆக அதிகரித்தது. 3 மணி நேரம் வரை பக்தர்கள் கியூவில் நின்று தரிசனம் நடத்தினர்.
ஆன்லைன் முன்பதிவு அனுமதிக்கப்பட்ட அனைத்து நாட்களிலும் முழுமையாக முடிந்து விட்ட நிலையில், நேற்று முன்தினம் மாலை நவ.,30 வரை எல்லா நாட்களிலும் தினமும் ஐந்தாயிரம் பேருக்கு கூடுதல் அனுமதி வழங்கப்பட்டது. அதிலும் சில நாட்களில் முன்பதிவு நேற்று நிறைவு பெற்றுவிட்டது. 66,000 பேர் முன்பதிவு செய்த நிலையில் தினமும் 10 முதல் 15 ஆயிரம் பேர் வரை குறைவாகவே வந்து கொண்டிருக்கின்றனர். முன்பதிவு கிடைக்காதவர்கள் ஸ்பாட் புக்கிங் எடுப்பதற்காக நிலக்கல் வருகின்றனர். ஆனால் அங்கு ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கைக்கு அதிகமாக வழங்கப்படாததால் பக்தர்கள் சிரமப்படுகின்றனர். ஆன்லைன் முன்பதிவு செய்தவர்கள் எதற்காக சபரிமலை வரவில்லை? அல்லது இனிவரும் நாட்களில் இந்த கூப்பனை பயன்படுத்தி வருவார்களா? என்ற ஆதங்கம் தேவசம்போர்டுக்கு ஏற்பட்டுள்ளது.பக்தர்கள் தாங்கள் முன்பதிவு செய்த நாளில் குறிப்பிட்ட நேரத்தில் வர வேண்டும் என்று தேவசம்போர்டும், கேரள காவல்துறையும் வேண்டுகோள் விடுத்துள்ளது. கார்த்திகை ஒன்றாம் தேதி நடை திறந்த அன்று 58 ஆயிரத்து 697 பேர் முன்பதிவு செய்திருந்தனர். இவர்களில் 40 ஆயிரம் பேர் மட்டுமே தரிசனத்திற்கு வந்தனர். மீதமுள்ள 19000 பேர் வரவில்லை இவர்கள் வரும் நாட்களில் இந்த கூப்பணை கொண்டு வருவார்களா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது சபரிமலை சுற்றுப்புறங்களில் எக்ஸ்சைஸ் துறையினர் நடத்திய திடீர் சோதனையில் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 96 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 19200 அபராதம் விதிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். சபரிமலையில் இந்த ஆண்டு அரவணை விநியோகத்துக்கு தானியங்கி இயந்திரம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில் அரவணை பெறுவதற்கு பக்தர்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். எப்போதும் இங்கு கூட்டம் நிரம்பி காணப்படுகிறது. அதுபோல அப்பம் அரவணைக்கு தானியங்கி இயந்திரம் மூலம் பணம் செலுத்தி ரசீது பெற்று கவுண்டர்களில் பிரசாதம் பெறுவதற்கும் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது.