உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருமலையில் சக்கர தீர்த்த முக்கோடி உற்சவம்: சக்கரத்தாழ்வாருக்கு சிறப்பு அபிஷேகம்

திருமலையில் சக்கர தீர்த்த முக்கோடி உற்சவம்: சக்கரத்தாழ்வாருக்கு சிறப்பு அபிஷேகம்

திருப்பதி: திருமலையில் கார்த்திகை மாதத்தை முன்னிட்டு, சக்கர தீர்த்த முக்கோடி உற்சவம் இன்று சனிக்கிழமை (நவம்பர் 21) வெகு விமரிசையாக நடைபெற்றது. ஆண்டுதோறும் கார்த்திகை மாதத்தில் இந்த உற்சவத்தை நடத்துவது நீண்டகால மரபாக இருந்து வருகிறது. மங்கல வாத்தியங்கள் முழங்க, ஸ்ரீவாரி கோயிலில் இருந்து அர்ச்சகர்கள், கோயில் பணியாளர்கள் மற்றும் பக்தர்கள் ஊர்வலமாக சக்கர தீர்த்தத்திற்குச் சென்றனர். அங்கு சக்கரத்தாழ்வார், நரசிம்மர், ஆஞ்சநேயர் ஆகியோருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் புஷ்ப அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து பக்தர்களுக்குத் தீர்த்தம் மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டது.


சக்கர தீர்த்தம் உருவான வரலாறு: ஸ்கந்த புராணத்தின்படி, பத்மநாப மகரிஷி என்பவர் சக்கர தீர்த்தத்தில் 12 ஆண்டுகள் கடும் தவம் செய்தார். அவரது பக்தியில் மகிழ்ந்த மகாவிஷ்ணு, சங்கு, சக்கரம், கதை ஆகிய ஆயுதங்களுடன் அவருக்குக் காட்சியளித்தார். கல்பம் முடியும் வரை தன்னைத் தொடர்ந்து வழிபடுமாறு மகரிஷியிடம் கூறிவிட்டு மறைந்தார். இறைவனின் கட்டளையை ஏற்று பத்மநாப மகரிஷி தொடர்ந்து தவம் செய்து வந்தார். ஒருநாள் அவரை விழுங்கும் நோக்கத்துடன் அங்கு வந்த அரக்கனிடம் இருந்து தன்னைக் காக்குமாறு மீண்டும் இறைவனை வேண்டினார். அப்போது மகாவிஷ்ணு தனது சுதர்சன சக்கரத்தை அனுப்பி அந்த அரக்கனை அழித்தார். இதையடுத்து, பக்தர்களைக் காக்கும் வகையில் சுதர்சன சக்கரம் அந்தப் பகுதியிலேயே நிரந்தரமாகத் தங்கியிருக்க வேண்டும் என்று மகரிஷி வேண்டினார். இறைவனும் அதற்கு அருள்புரிந்தார். இதன் காரணமாகவே அந்தப் புனித நீர்நிலை சக்கர தீர்த்தம் என்று அழைக்கப்படுவதாகப் புராணம் தெரிவிக்கிறது. வராக புராணத்தின்படி, திருமலை சேஷகிரி மலைகளில் 66 கோடி தீர்த்தங்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது. அவற்றில் மிகவும் சிறப்பு வாய்ந்த ஏழு தீர்த்தங்கள் சப்த தீர்த்தங்கள் என அழைக்கப்படுகின்றன. அவற்றில் சக்கர தீர்த்தமும் முக்கியமான இடத்தைப் பெற்றுள்ளது. இந்த உற்சவத்தில் கோயில் அதிகாரிகள், அர்ச்சகர்கள் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !