உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருநள்ளாறு சனீஸ்வரன் கோவிலில் கார்த்திகை சொக்கப்பனை மகாதீபத்திருவிழா

திருநள்ளாறு சனீஸ்வரன் கோவிலில் கார்த்திகை சொக்கப்பனை மகாதீபத்திருவிழா

காரைக்கால்: காரைக்கால் திருநள்ளாறு சனீஸ்வரன் கோவிலில் கார்த்திகையை முன்னிட்டு சொக்கப்பனை மகாதீபத்திருவிழா நடந்தது.


காரைக்கால் திருநள்ளாறில் உலகப்புகழ்பெற்ற ஸ்ரீ தர்ப்பாரண்யேஸ்வரர் கோவிலில் ஸ்ரீ சனீஸ்வர பகவான் தனிச்சன்னதியில் அனுக்கிரக மூர்த்தியாக பக்தர்களுக்கு அருள்பலித்து வருகிறார்.இக்கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு நேற்று சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடந்தது. இதையொட்டி சனீஸ்வரன், விநாயகர், முருகன், சிவன்,அம்பாள் மற்றும் சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் மகா தீபாராதனை நடந்தது. தொடர்ந்து பூஜிக்கப்பட்ட பெரிய அகல் விளக்குகளை மூன்று சிவாச்சாரியார்கள் கைகளில் ஏந்தி ஆலயத்தை வலம் வந்தனர்.பின்னர் கோவில் நுழைவு வாயிலுக்கு எதிரே அமைக்கப்பட்டிருந்த சொக்கப்பனைக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு சொக்கப்பனை மகாதீபம் ஏற்றப்பட்டது.இந்நிகழ்ச்சியில் தருமபுர ஆதீன கட்டளை விசாரணை ஸ்ரீமத் சட்டநாத தம்பிரான் சுவாமிகள், கோவில் நிர்வாக அதிகாரி உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.இதனைத் தொடர்ந்து பஞ்சமூர்த்திகள் வீதியுலா நடந்தது.இதுப்போல் பல்வேறு முக்கிய கோவில்களில் மகாதீபம் ஏற்றப்பட்டது.கார்த்திகை சொக்க தீபத் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !