மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கார்த்திகை தீபத்திருவிழா கோலாகலம்
வடவள்ளி: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில், கார்த்திகை தீபத்திருவிழா கோலாகலமாக நடந்தது.
முருகனின் ஏழாம் படை வீடாக கருதப்படும் மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில், நேற்று அதிகாலை, 5:30 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 16 வகையான திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. அதிகாலை, 6:00 மணிக்கு, சுப்பிரமணிய சுவாமி ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். உற்சவமூர்த்தியான வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி, தங்கமயில் வாகனத்தில் எழுந்தருளி, திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். மாலை, 6:00 மணிக்கு, ஆதி மூலஸ்தானத்தில் தீபம் ஏற்றி வழிபாடு துவங்கப்பட்டது. தொடர்ந்து, பஞ்சமுக விநாயகர், பட்டீஸ்வரர், மரகதாம்பிகை அம்பாள், வரதராஜ பெருமாள் சன்னதியில் தீபம் ஏற்றப்பட்டது. மாலை, 6:50 மணிக்கு கோயில் வளாகத்தில் உள்ள தீபகம்பத்தில், மங்கள வாத்தியங்கள் முழங்க மகா தீபம் ஏற்றப்பட்டது. அதனைத்தொடர்ந்து, சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சி நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசித்தனர்.