மணல்களை கொண்டு மலை ஏற்படுத்தி திருக்கானூர் சிவன் கோவிலில் மணல் தீபம் ஏற்றி வழிபாடு
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் திருக்கானூர் சௌந்தர்யநாயகி சமேத கரும்பேஸ்வரர் கோவிலில் முதன் முதலாக மணல்களை கொண்ட குன்று ஏற்படுத்தி, கார்த்திகை தீபம் ஏற்றும் விழாவும்,பௌர்ணமி கிரிவலம் நிகழ்வும் நேற்று (நவ.24) நடைபெற்றன.
திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தரால் பாடல் பெற்ற சிவத்தலமாகிய திருக்கானூர் கரும்பேஸ்வரர் கோவிலை மையமாகக் கொண்டு திருக்கானூர், திருவானராங்குடி, திருச்சடைவளந்தை, திருச்செந்தலை, திருக்காட்டுப்பள்ளி, திருநியமம் திருச்சினம்பூண்டி ஆகிய 7ஊர் சிவன் கோவில்களை உள்ளடக்கி சப்தஸ்தான பெருவிழா நடைபெற்று வருகிறது. தற்போது பெளர்ணமி கிரிவலம் தொடங்க இக்கோவிலில் மதில் சுவர்கள் முழுவதும் புதுவண்ணம் பூசப்பட்டு, சிகப்பு மற்றும் வெள்ளை நிறபட்டைகள், எட்டு திசைகளிலும் திசைகாவல் தெய்வங்களான இந்திரன், அக்னி, எமன், நிருருதி, வருணன், வாயு, குபேரன், ஈசானன் ஆகியோர் வழிபடும் சிவலிங்க சித்திரங்கள் புதியதாக வரையப்பட்டுள்ளன. கோயிலில் வலம் வருவதற்கான பாதைகள் சீரமைக்கப்பட்டுள்ளன. மேலும் கோவிலை சுற்றி உருவாகி இருந்த மணல் குன்றில் நேற்று மாலை கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டுகிரிவலம் நடைபெற்றது.ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் கோபி மற்றும் கிராம மக்கள் செய்து இருந்தனர். இனி தொடர்ந்து ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி நாளில் கிரிவலம் தொடர்ந்து நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டது.