பண்ணக்குப்பம் கோவிலில் யாக சாலை பூஜை துவக்கம்
கண்டமங்கலம்: கண்டமங்கலம் அருகில் உள்ள பண்ணக்குப்பம் கிராமத்தில் கெங்கையம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவையொட்டி யாகசாலை பூஜை நேற்று கணபதி ஹோமத்துடன் துவங்கியது. கண்டமங்கலம் ரயில்வேகேட் அருகில் உள்ள பண்ணக்குப்பத்தில் செல்வவினாயகர், முருக பெருமான், மற்றும் நவக்கிரக பரிவார தெய்வங்களுடன் ஸ்ரீ கெங்கையம்மன் கோவில் கும்பாபிஷேகம் நாளை 15ம் தேதி காலை 7 மணிக்கு நடக்கிறது. இதையடுத்து நேற்று காலை 9 மணிக்கு யாகசாலை பூஜை கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், லட்சுமி ஹோமத்துடன் துவங்கியது. மாலை 5.30 மணிக்கு சிறப்பு பூஜை மற்றும் அபிஷேக ஆராதனைகளும், முதல் காலயாக பூஜையும் நடந்தது. இன்று 14ம் தேதி காலை 8 மணிக்கு விசேஷசாந்தி, கரிக்கோல விழா, கோபூஜை மற்றும் இரண்டாம் காலயாக பூஜையும், மாலை மூன்றாம் கால யாக சாலை பூஜை நடக்கிறது. நாளை 15ம் தேதி காலை 4.30 மணிக்கு நான்காம் கால யாக சாலை பூஜை, நாடி சந்தானம், காலை 7 மணிக்கு புனித நீர் புறப்பாடு, விமானங்களுக்கு மகா கும்பாபிஷேகம், காலை 7.15 மணிக்கு மூலவர் மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை பண்ணக்குப்பம் கிராமவாசிகள் செய்துவருகின்றனர்.