கனவில் சுவாமி கூறியதாக திருமணம் நிறுத்தம்!
சத்தியவேடு: நிச்சயிக்கப்பட்ட பெண்ணை திருமணம் செய்தால், மணமகன் இறக்க நேரிடும் என, கனவில் சுவாமி கூறியதாக சொல்லி, 8 லட்சம் ரூபாய் பணத்துடன் ஓட்டம் பிடித்த மணமகனை, போலீசார் தேடி வருகின்றனர். திருப்பதி ஜோதி நகர் பகுதியைச் சேர்ந்தவர், முனிகிருஷ்ணன். இவரது மகன் சீனிவாசலு, 35. இவருக்கும், ஊத்துக்கோட்டை அடுத்த, ஆந்திர மாநிலம், சத்தியவேடு பகுதியைச் சேர்ந்த, குர்ரப்பசெட்டி மகள் சுஜாதாவிற்கும், திருமணம் செய்ய கடந்தாண்டு, ஆகஸ்டு மாதம் நிச்சயதார்த்தம் நடந்தது. மணமகள் வீட்டில் வரதட்சணையாக, 10 லட்சம் ரூபாய் பணம், 20 சவரன் நகை போடுவதாக கூறினர். இதில், 8 லட்சம் ரூபாய் பணம் கொடுக்கப்பட்டது. இந்நிலையில், கடந்த, 11ம் தேதி, மணமகன் உறவினர் கனவில் சுவாமி தோன்றி, இந்த திருமணம் நடந்தால், சீனிவாசலு இறப்பது உறுதி என, கூறியதாக தெரிவித்தனர். இதையடுத்து, மணமகன் வீட்டார் இந்த திருமணத்தை நிறுத்தும்படி, சுஜாதா தரப்பிடம் கூறி உள்ளனர்.
இந்நிலையில், 8 லட்ச ரூபாய் பணத்துடன், சீனிவாசலு தலைமறைவானதை சுஜாதா வீட்டார் தெரிந்து கொண்டனர். இதில் அதிர்ச்சி அடைந்த குர்ரப்பசெட்டி, இதுகுறித்து கடந்த, 13ம் தேதி, சத்தியவேடு போலீசில் புகார் செய்தார். ஆனால், புகார் கொடுத்து இரு தினங்கள் ஆகியும், இதுவரை எவ்வித நடவடிக்கையும் போலீசார் எடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த, சுஜாதாவின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் சத்தியவேடு காந்தி சிலை அருகே, சாலை மறியலில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீஸ் எஸ்.ஐ., ஈஸ்வர் மற்றும் போலீசார் மறியலில் ஈடுபட்ட மக்களிடம், பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், சீனிவாசலுவை விரைவில் கைது செய்வதாக தெரிவித்தனர். இதையடுத்து, சுஜாதாவின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கலைந்து சென்றனர். இதனிடையே, திருமணத்தை முன்னின்று ஏற்பாடு செய்த, சீனிவாசலுவின் உறவினர்கள் மனோர், 45, வெங்கட்ரத்திரம், 60 ஆகிய இருவரை, போலீசார் விசாரித்து வருகின்றனர்.