கள்ளழகர் ஆற்றில் இறங்க தயாரானது பட்ஜெட்!
மதுரை: மதுரை வைகை ஆற்றில் கள்ளழகர் எழுந்தருளும் நிகழ்ச்சிக்காக செலவிடும் தொகையை, இப்போதே தயார் செய்து விட்டது, மாநகராட்சி. மதுரையின் அடையாளங்களில் ஒன்றான சித்திரை திருவிழா, சில மாதங்களில் தொடங்க உள்ளது. ஆழ்வார்புரம் வைகை ஆற்றில், கள்ளழகர் எழுந்தருளும் நிகழ்வை காண, ஏராளமான பக்தர்கள் குவிவர். இந்த ஆண்டிற்கான சித்திரை திருவிழாவின் செலவினங்கள் பட்டியலை, மாநகராட்சி தயார் செய்துவிட்டது. உத்தேச செலவாக, சுகாதாரப்பிரிவிற்கு ரூ.22 லட்சத்து 43 ஆயிரத்து 300, பொறியியல் பிரிவுக்கு ரூ.25 லட்சம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதில், கள்ளழகர் இறங்கும் இடத்தில் தற்காலிக பாலம் அமைக்க ரூ.15 லட்சம், கள்ளழகர் இறங்கும் இடம் மற்றும் ராமராயர் மண்டபத்தில் மின் வசதி ஏற்படுத்த ரூ.7 லட்சம், 50 இடங்களில் தற்காலிக பிளாஸ்டிக் குடிநீர் தொட்டிகள் அமைக்க ரூ.3 லட்சம், தற்காலிக தினக்கூலி துப்புரவு பணியாளர்களுக்கு ரூ.6 லட்சத்து 68 ஆயிரத்து 300, துப்புரவு சாதனங்களுக்கு ரூ.5 லட்சம், துப்புரவு கிருமி நாசினிகள், பூச்சிக்கொல்லிகள், சுண்ணாம்புத்தூர் மருந்துகளுக்கு ரூ.1 லட்சம், பிரசார விளம்பரத்திற்கு ரூ.50 ஆயிரம், துப்புரவு தொடர்பாக எதிர்பாராமல் ஏற்படும் அவசர செலவுக்கு முன் பணமாக ரூ.25 ஆயிரம், என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.