பொறையூரில் கும்பாபிஷேகம்
வில்லியனூர்:வில்லியனூர் அடுத்த பொறையூரில் உள்ள வேம்பரசி நாயகி உடனுறை பிறைச்சூடிய பெருமான் சிவாலாய கும்பாபிஷேகம் நேற்று காலை நடந்தது. கும்பாபிஷேக விழா 8ம் தேதி காலை, கணபதி வழிபாடுடன், பூஜைகளுடன் துவங்கியது. 9ம் தேதி காலை 7.30 மணிக்கு, நந்தி பெருமான் ஊர்வலமும், யாகசாலை வழிபாடு நடந்தது. மாலை 4.30 மணிக்கு, நந்தி பெருமானை, பீடத்தில் அமர்த்தி, பன்னிரு திருமுறை ஓதுதல் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
நேற்று (10ம் தேதி) காலை 7.30 மணிக்கு மங்கல கலச புறப்பாடும், அதனைத் தொடர்ந்து காலை 8.35 மணியளவில் வேம்பரசி நாயகி உடனுறை பிறைச்சூடிய பெருமான் கோயிலுக்கும், மூலவர், நந்தி பெருமான் ஆகியோருக்கு சிவ குமாரசாமி மற்றும் சிவ தங்கமணி ஆகியோர் தலைமையில் சிவனடியார் குழுவினர்கள் திருக்குட நன்னீராட்டினர். தொடர்ந்து தேவாரம், திருவாசகம் ஓதப்பட்டு, மகா தீபாராதனையும் அன்னதானமும் நடந்தது. நிகழ்ச்சியில் முதல்வர் ரங்கசாமி, சேர்மன்கள் கார்த்திகேயன், அசோக் ஆனந்த், துணை தாசில்தார் கார்த்திகேயன் மற்றும் பல்வேறு கிராமங்களைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை சிவனடியார்கள், சிவாச்சாரியர்கள் மற்றும் பொறையூர் கிராம மக்கள் செய்
தனர்.