பண்ணாரியில் பூச்சாட்டுடன் குண்டம் விழா இன்று துவக்கம்: ஐதீகப்படி மழை உறுதி
சத்தியமங்கலம்: பண்ணாரி மாரியம்மன் கோயிலில் இன்று இரவு பூச்சாட்டு நிகழ்ச்சியுடன், இந்தாண்டுக்கான குண்டம் விழா துவங்குகிறது. ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ளது பண்ணாரி மாரியம்மன் கோயில். தமிழகத்தில் உள்ள புகழ்பெற்ற அம்மன் ஸ்தலங்களில் இதுவும் ஒன்றாகும். ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதம் மகம் நட்சத்திரம் அடுத்து வரும் செவ்வாய்கிழமை இக்கோயிலில் குண்டம் விழா நடப்பது வழக்கம். இங்கு நடக்கும் குண்டம் விழா மிகவும் புகழ் பெற்றதாகும். இந்தாண்டுக்கான குண்டம் விழா இன்று இரவு பூச்சாட்டுடன் துவங்குகிறது. இதையடுத்து பண்ணாரி மாரியம்மன் சப்பரத்தில் பண்ணாரி கோயிலில் இருந்து துவங்கி சிக்கரசம்பாளையம், சத்தி, தொட்டம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் வீதி உலா செல்லும். அம்மன் கோயிலில் இருந்து வெளியே சென்று வீதி உலா முடிந்து வருவதற்குள், கட்டாயம் மழை பெய்வது இதுவரை ஐதீகமாக இருந்து வருகிறது. இதனால் சத்தியமங்கலம் பகுதியில் மழை வரும் என பக்தர்கள்கள் எதிர்பார்க்கின்றனர்.
மார்ச், 19ம் தேதி கம்பம் நடும் விழாவும், 26ம் தேதி செவ்வாய்கிழமை அதிகாலை நான்கு மணிக்கு குண்டம் விழாவின் முக்கிய நிகழ்வான பக்தர்கள் தீ இறங்கும் நிகழ்ச்சி நடக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான பக்தர்கள் தீ இறங்கி தங்கள் நேர்த்திக்கடனை நிறைவு செயவர். ஏப்ரல், ஒன்றாம் தேதி மறுபூஜை விழா நடக்கிறது. ஏற்பாடுகளை கோவை மண்டல அறநிலைத்தறை இணை கமிஷனர் நடராஜன் மேற்பார்வையில் பண்ணாரி மாரியம்மன் கோயில் துணை ஆணையர் (கூடுதல் பொறுப்பு) வில்வமூர்த்தி தலைமையில் அலுவலர்கள் மற்றும் பரம்பரை அரங்காவலர்கள் செய்து வருகின்றனர்.