மணியை விழுங்கிய அம்மணி!
காஞ்சிபுரத்திலுள்ள தூப்புல் பகுதியில் வாழ்ந்த அனந்தசூரி- தோதராம்பாள் தம்பதியர் ஏழுமலையான் மீது பக்தி கொண்டிருந்தனர். அவர்களது கனவில் ஒரு சிறுவனைப் போல வெங்கடேசப் பெருமாள் எழுந்தருளினார். தோதராம்பாளிடம் ஒரு வெள்ளிமணியை கொடுத்து விழுங்கச் சொன்னார். அம்மையாரும் விழுங்கி விட்டார். இதையடுத்து அவர் கர்ப்பமானார். மறுநாள் காலை, திருப்பதி பெருமாளுக்கு நைவேத்யம் படைத்த அர்ச்சகர், ஆராதனை மணியை காணாமல் தேடினார். அப்போது அங்கு வந்த திருமலை ஜீயர்,யார் மீதும் சந்தேகப்படாதீர்கள். எல்லாம் எம் பெருமானின் திருவிளையாடல் தான். இன்று முதல் சுவாமிக்கு மணியோசை தேவையில்லை, என்று நடந்ததை விளக்கிச் சொன்னார். தோதராம்பாள், ஆராதனை மணியின் அம்சமாக ஒரு ஆண் குழந்தையைப் பெற்றார். அக்குழந்தைக்கு,வேங்கடநாதன் என்று பெயரிட்டனர். பின்னாளில், இவரே, வேதாந்த தேசிகர் என்று அனைவராலும் போற்றப்பட்டார்.