கருங்கல் கருணைமாதா மலை திருச்சிலுவை பயணம்
கிள்ளியூர்: கருங்கல் கருணைமாதா மலைக்கு திருச்சிலுவை திருப்பயணம் நேற்று(29ம் தேதி) நடந்தது.இயேசு கிறிஸ்து இவ்வுலகில் 33 ஆண்டுகள் மனிதராக வாழ்ந்து, இறைமாட்சியைப் போதித்து, அற்புதங்கள் செய்து, முடிவில் உயிரை தியாகம் செய்தார். அவர் தனது உயிரை அர்ப்பணம் செய்வதற்கு முன் 40 நாட்கள் பாலைவனத்தில் கடும் தவம் மேற்கொண்டார்.அதை நினைவு கூரும் வகையில், உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் 40 நாட்கள் நோன்பிருந்து, தவக்காலமாக கடைபிடிக்கின்றனர். மேலும், தேவாலயங்களில் சிலுவை பாதை நடத்தி, தியானித்து வழிபடுவது வழக்கமாக உள்ளது.கருங்கல் துண்டத்துவிளை தூய அந்தோணியார் ஆலய பங்கு மக்கள் சார்பில், ஆண்டுதோறும் புனித வெள்ளி அன்று இயேசுவின் சிலுவைப்பாடுகளின் 14 நிகழ்வுகளையும் தத்ரூபமாக சித்தரித்துக் காட்டி, திருப்பயணம் செய்து தியானிக்கிறார்கள்.இந்த சிலுவை பாதை பயணம், தூய அந்தோணியார் ஆலய வளாகத்தில் இருந்து நேற்று(29ம் தேதி) காலை எட்டு மணிக்கு துவங்கியது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் காலை ஆறு மணிக்கே ஆலய வளாகத்தில் கூடினார்கள்.இந்த ஆண்டு 33வது திருச்சிலுவை பயணம் பங்குத்தந்தை டோமினிக் சாவியோ தலைமையில் நடந்தது. ஜெரால்டு ஜேசுராஜ், பங்கு பேரவை துணைத்தலைவர் வில்லியம், செயலாளர் ரெக்ஸிலின் விஜி, துணைச்செயலாளர் ஜேம்ஸ், பொருளாளர் மத்தியாஸ் முன்னிலை வகித்தனர்.திருச்சிலுவை பயணத்தில் இயேசுவின் திருப்பாடுகள் 14 தலங்களாக பிரித்து, தத்ரூபமாக சித்தரித்துக் காட்டப்பட்டன.இயேசுவுக்கு சிலுவை மரணதீர்ப்பு அளிப்பது ஒன்றாம் தலமாகவும், இயேசுவின் தோளில் சிலுவை ஏற்றுவது இரண்டாம் தலமாகவும், சிலுவை பாரத்தால் இயேசு முதல் முறையாக கீழே விழுவது மூன்றாம் தலமாகவும் சித்தரித்து காட்டப்பட்டது.
சிலுவையை சுமந்து செல்லும் வழியில், தனது தாய் மரியாளை இயேசு சந்திப்பது நான்காவது தலமாகவும், இயேசுவிடம் இருந்து சிலுவையை வாங்கி சீமோன் சுமந்து செல்வது ஐந்தாவது தலமாகவும், இரத்த வியர்வை படிந்த முகத்தை வெரோணிக்காள் துணியால் துடைக்கும் நிகழ்ச்சி ஆறாவது தலமாகவும் சித்தரித்து காட்டப்பட்டது. மேலும், சிலுவையின் சுமையால் இயேசு இரண்டாவது முறை விழுவது ஏழாவது தலமாகவும், சிலுவையை சுமந்து சென்ற இயேசுவைப் பார்த்து அழும் ஜெருசலேம் பெண்களை ஆறுதல் படுத்துவது எட்டாவது தலமாகவும், இயேசு கல்வாரி மலையை நெருங்கும் நேரத்தில் மூன்றாம் முறையாக கீழே விழும் நிகழ்ச்சி ஒன்பதாவது தலமாகவும் சித்தரிக்கப்பட்டது. கல்வாரி மலையில் இயேசுவை சிலுவையில் அறைய, ஆடைகளைக் கழற்றுவது பத்தாவது தலமாகவும், இயேசுவை சிலுவையில் அறைவது 11வது தலமாகவும், சிலுவையில் இயேசு உயிர் விடுவது 12வது தலமாகவும், இயேசுவின் உடலை தாய் மரியாள் மடியில் தாங்குவது 13வது தலமாகவும், இயேசுவின் உடல் கல்லறையில் அடக்கம் செய்வது 14வது தலமாகவும் சித்தரிக்கப்பட்டது. இந்த திருச்சிலுவை பயணத்தில் ஜெரால்டு ஜேசுராஜ், கருங்கல் பேரூராட்சி தலைவர் எப்சிராணி, கருங்கல் பேரூர் தி.மு.க., செயலாளர் ஜார்ஜ், குமரி மேற்கு மாவட்ட முன்னாள் இளைஞர் காங்., தலைவர் வழக்கறிஞர் ராஜேஷ்குமார், குமரி இளைஞர் காங்., தலைவர் ஆஸ்கர் பிரடி, டாக்டர் லியோன், டாக்டர் ஷெரின் லியோன், கிள்ளியூர் ஒன்றிய அ.தி.மு.க., செயலாளர் ஜார்ஜ், கருங்கல் பேரூர் செயலாளர் அருள்ராஜ், பெனடிக்டா, மணி, ஜோசப், பால்ராஜ், சுந்தர்ராஜ், அந்தோணி, லூக்காஸ், மோகன், சுகிதர், ஜோ, ஜோசப் லெனின்பாபு, கிளாஸ்டன், சாந்தா, அனிஷ்பாப்பா, சிசிலி, ஜினி, ஜேம்ஸ், அனிதா, மோசஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர். பிற்பகல் இரண்டு மணி அளவில் திருச்சிலுவை திருப்பயணம் முடிந்தது. முடிவில் அனைவருக்கும் கஞ்சி தானம் வழங்கப்பட்டது.