கோவில்பட்டி கதிரேசன் மலைக்கோயிலில் வருஷாபிஷேக விழா
கோவில்பட்டி: கோவில்பட்டி சொர்ணமலை கதிரேசன் கோயிலில் வருஷாபிஷேக விழா நடந்தது. கோவில்பட்டி செண்பகவல்லியம்மன் கோயிலுடன் இணைந்த சொர்ணமலை கதிரேசன் கோயில் 7வது ஆண்டு வருஷாபிஷேக விழா நடந்தது. இதையொட்டி அதிகாலையில் கதிர்வேல் முருகன் கோயில் நடைதிறக்கப்பட்டது. தொடர்ந்து வருஷாபிஷேக சிறப்பு பூஜைகள் கணபதி ஹோமத்துடன் துவங்கியது. இதில் யாகசாலை பூஜைகள், சிறப்பு ஹோமம், பூர்ணாகுதி தீபாராதனை நடந்தது. இதையடுத்து தீர்த்தக்குடங்கள் கோயிலை சுற்றி வலம் வந்த பின்னர் மூலவர் கதிர்வேல் முருகன், விமானம், விநாயகர், தண்டாயுதபாணி ஆகியோருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனைகள் நடந்தது. தொடர்ந்து மூலவர் கதிர்வேல் முருகன் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது. கோவில்பட்டி வள்ளலார் தபோவனம் அமைப்பின் சார்பில் பக்தர்களுக்கு புளியோதரை மற்றும் சர்க்கரை பொங்கல் பிரசாதம் அளித்தனர். விழாவில் கோயில் கட்டளைதாரர்கள் காளிராஜன், நாகஜோதி, கோவில்பட்டி நகராட்சி சேர்மன் ஜான்சிராணி, துணை சேர்மன் ராமர், அதிமுக நகர செயலாளர் சங்கரபாண்டியன், கோவில்பட்டி எம்எல்ஏ கடம்பூர்ராஜூ, இந்திராகாந்தி, நகராட்சி கவுன்சிலர்கள், மாவட்ட கவுன்சிலர் லட்சுமணபெருமாள், ரோட்டரி சங்க தலைவர் விக்னேஷ்வரன் உள்பட கோவில்பட்டி சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை கோவில்பட்டி செண்பகவல்லியம்மன் கோயில் நிர்வாக அதிகாரி கசன்காத்த பெருமாள், உதவி ஆணையர் செல்லத்துரை ஆகியோர் செய்திருந்தனர்.