நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் முன்பதிவு நிறைவு: பக்தர்கள் பெரும் ஏமாற்றம்!
நாமக்கல்: ஆஞ்சநேயர் கோவிலில், தினசரி அபிஷேகத்துக்கான முன் பதிவு முடிவடைந்துள்ளது. அதனால், பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர். நாமக்கல் நகரில், பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு, தமிழகம் மட்டும் அல்லாமல், வெளிமாவட்ட, மாநில மற்றும் வெளிநாட்டினர் வந்து, ஸ்வாமியை வழிபட்டுச் செல்கின்றனர். இங்கு, தினமும், ஸ்வாமிக்கு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடத்தப்படுகிறது. தினமும் காலையில் நடை திறக்கப்பட்டு, ஸ்வாமிக்கு, 1,008 வடமாலை சாத்தப்படும். அதை தொடர்ந்து, ஆஞ்சநேயருக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது. அதற்கான செலவை, பக்தர்கள் ஏற்கின்றனர். மூன்று ஆண்டுகளுக்கு முன் அபிஷேக செலவுத்தொகையை, ஒரு நபர் மட்டுமே ஏற்றுக்கொள்ள முடியும். அதனால், தாமதமாக வரும் பக்தர்கள், ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்லும் நிலை இருந்து வந்தது. பக்தர்களின் ஏமாற்றத்தை தவிர்க்கும் வகையில், அபிஷேக செலவை, மூன்று பேர் ஏற்கும் வகையில் மாற்றப்பட்டது. தற்போது, தினமும் அபிஷேகத்துக்கு கட்டணமாக தலா, 1,000 வீதம், 3,000 ரூபாய் வசூல் செய்யப்படுகிறது. அதேபோல், பூஜை பொருட்கள் வாங்குவதற்கு, தலா, 4,000 வீதம் மொத்தம், 12 ஆயிரம் ரூபாய் வசூல் செய்கின்றனர். ஒவ்வொரு ஆண்டும், முந்தைய ஆண்டு நவம்பர் மாதங்களில், முன்பதிவு துவங்குவது வழக்கம். அதன்படி, நடப்பு, 2013ம் ஆண்டுக்கான முன்பதிவு, கடந்த நவம்பர் மாதம் துவங்கியது. அதை தொடர்ந்து, நடப்பு, 2013ம் ஆண்டுக்கான முன்பதிவு, சமீபத்தில் முடிந்தது. அதனால், அபிஷேக முன்பதிவுக்கு வரும் பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர்.
இது குறித்து கோவில் நிர்வாகிகள் சிலர் கூறியதாவது: நடப்பு, 2013ம் ஆண்டுக்கான முன்பதிவு, கடந்த நவம்பர் மாதம் துவங்கியது. பக்தர்கள் ஆர்வத்துடன் வந்து முன் பதிவு செய்ததை தொடர்ந்து, சமீபத்தில் முடிவடைந்தது. முன் பதிவுக்கு வரும் பக்தர்கள் பெயரை குறித்து வைத்துக் கொண்டு, ஏற்கனவே முன்பதிவு செய்துள்ள நபர்களில் யாராவது வாபஸ் பெற்றுக்கொண்டால், வாய்ப்பு வழங்கப்படும். அதேபோல், பக்தர்கள் தங்கத்தேருக்கு, 1,500 ரூபாய் செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம். புஷ்பங்கி அலங்காரம், சந்தனகாப்பு அலங்காரம் போன்றவற்றுக்கும் தனித்தனியாக முன்பதிவு நடக்கிறது.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.